மார்பக புற்றுநோயானது உலகில் காணப்படும் பொதுவான வகை புற்றுநோய்களில் ஒன்றாகும். இதனால் பல பெண்கள்  தம் வாழ்வை இழக்கின்றனர் . உலகில் நிகழ்கின்ற இறப்புகளுக்கான காரணங்களில் புற்றுநோய் குறிப்பாக மார்பக புற்றுநோய் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது. இலங்கையில் இந்நிலை பற்றி ஆராய்வோமேயானால் உலகின் மற்றைய பகுதிகளின் சூழ்நிலையே இலங்கையிலும் காணப்படுகின்றது. ஒரு நாளைக்கு 12 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதோடு அதில் இருவர் உயிரிழக்கின்றனர். துரதிஷ்டவசமாக, மார்பக புற்றுநோயுடன் தொடர்புடைய புற்றுநோய் வகைகள் தடுக்க முடியாதவை. 

அவ்வாறெனில், இதற்கு தீர்வு என்ன?

மார்பகப் புற்றுநோயானது மார்பகத்தில் வெளிப்புற அறிகுறிகளைக் காட்டுவதற்கு முன்பு அதனை கண்டறிய முடிந்தால் முழுமையாக குணப்படுத்திக் கொள்ள முடியும். 1980 வரை மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையின் தரம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதையும் அடைந்திருக்கவில்லை. அதாவது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை குணப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றாலும், நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதோ அல்லது முழுமையாக குணப்படுத்துவதோ சாத்தியமற்றதாக இருந்தது. அதன் பின்  மார்பகப் புற்றுநோயை கண்டறிய மற்றும் குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் மேம்படுத்தப்பட்டவுடன், அதிலிருந்து குணமாகும் நோயாளிகளின் விகிதம் கணிசமாக அதிகரித்தது. இதில் மிகப் பெரிய பங்கு மம்மோகிராஃபி டெஸ்டிங்கினை சேரும். இதனால் பெண்கள் தங்கள் மார்பகங்களில் வெளிப்புற அறிகுறிகளைக் கவனிப்பதற்கு அல்லது உணருவதற்கு முன்பே மார்பக புற்றுநோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்க்கான  வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாறு முன்கூட்டியே அறிவதனால் முறையான சிகிச்சைகளை மேற்கொண்டு  மார்பக புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடிந்தது. இதனால் முழு மார்பகங்களையும் அகற்றவோ அல்லது கீமோதெரபி போன்ற சிகிச்சைகளுக்கு உட் செல்ல வேண்டிய தேவையோ இருக்காது.

எந்த வயதினையுடைய பெண்கள் இந்த மம்மோகிராஃபி டெஸ்டிங்கினை மேற்கொள்ள வேண்டும்?

இலங்கையில் உள்ள மருத்துவர்களின் பரிந்துரைப்படி, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடந்தோறும் அல்லது குறைந்தது 2 வருடங்களுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசோதனையை செய்ய வேண்டும். எனினும், அதற்கான வாய்ப்புகள் இலங்கையில் இல்லை.

அவ்வாறெனில், இதற்கு மாற்று பரிசோதனை முறை என்ன?

இந்த பரிசோதனை முறையானது மம்மோகிராஃபி அளவுக்கு பயனுள்ளதாக இல்லை என்றாலும், 20 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் இதனைக் கொண்டு தங்கள் மார்பகங்களின் நிலையை சுயமாக பரிசோதிக்குமாறு அறிவுறுத்துகிறோம். எவ்வாறெனில், அவர்களது மாதாந்த மாதவிடாய் முடிந்து 7 – 10 நாட்கள் கடந்த பின் கண்ணாடியின் முன் மார்பகங்களைத் தாங்களாகவே அவதானிக்க வேண்டும், அவ்வாறு அவதானிக்கையில் மேற்பரப்பில் ஏதேனும் வழக்கத்துக்கு மாறான முறைகேடுகள், முலைக்காம்பிலிருந்து அசாதாரண வெளியேற்றம் அல்லது மார்பக புற்றுநோய்க்கான பிற அறிகுறிகள் தென்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். 

மார்பக புற்றுநோயை மருத்துவ நிபுணர் ஒருவரிடம் சென்று தனது மார்பகத்தை பரிசோதிப்பதனூடாகவும் கண்டறிந்துக் கொள்ளலாம். 20-39 வயதுடைய பெண்கள் 1-3 வருடங்களுக்கு ஒரு முறையும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடத்திற்கு ஒரு முறையும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த பரிசோதனை முறைகளும் கால எல்லைகளும் மார்பக புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்புகள் சாதாரண நிலையில் உள்ள பெண்களுக்கு மட்டுமே பொருத்தமானவை. 

ஏற்கனவே தனது தாய், சகோதரி அல்லது நெருங்கிய உறவினரின் மருத்துவ வரலாற்றில் மார்பக புற்றுநோய் பதிவாகியுள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மற்ற பெண்களை காட்டிலும் அதிகம். இவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து நிலையை சரியாக ஆராய்ந்த பின், சிலருக்கு 40 வயதிற்கு முன்பே மேமோகிராம் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாகவே 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மம்மோகிராஃபி பரிந்துரைக்கப்படுவதில்லை ஏனெனில் மம்மோகிராஃபி பரிசோதனையின் உணர்திறன் 40 வயதிற்குட்பட்ட பெண்களில் படிப்படியாக குறைகிறது. எனவே அவர்களுக்கு நாங்கள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் மார்பகங்களுக்கான எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியவற்றை மேற்கொள்கிறோம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஒரு சிறிய மாதிரியை எடுத்து பரிசோதிப்பதனூடாக, அது புற்றுநோயாக இருக்கிறதா என்று துல்லியமாக கண்டறிய முடியும். பரிசோதனையின் மூலம் சந்தேகம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், உடலின் மற்ற பகுதிகளுக்கும்  பரவியிருக்கிறதா என்பதை PET-CT ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறோம். இதற்க்கான இயந்திரம் தனியார் மற்றும் அரசு துறைகளில் தலா ஒன்று மட்டுமே இருப்பதால், இந்த பரிசோதனையும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே நடத்தப்படுகிறது. 

ஒவ்வொரு மார்பகப் புற்றுநோயாளிக்கும் CT ஸ்கேன் மற்றும் எலும்பு ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் முடிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கான சிறந்த சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்கிறோம். புற்றுநோய் வேறு உறுப்புகளுக்கு பரவவில்லை என்றால் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கிறோம். புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில், மார்பகத்தை முழுவதுமாக அகற்றாமல் புற்றுநோய்க்குள்ளான  பகுதியை மட்டும் அகற்றும் வாய்ப்பு உள்ளது-Breast Conservation Surgery. அந்த அறுவை சிகிச்சைக்குப் பின், மார்பகத்திற்கான கதிர்வீச்சு சிகிச்சையைத் தொடர்கிறோம். ஒருவேளை புற்றுநோய் மார்பகத்தில் பரவியிருக்கும் சதவீதம் அதிகமாக இருந்தால், மார்பகத்தை முழுவதுமாக அகற்றுவதைத் பரிந்துரைக்கிறோம். இருப்பினும் அது குறித்துக் கவலைக் கொள்ள வேண்டியதில்லை, இப்போது புரோஸ்டெடிக்ஸ் அல்லது அவற்றின் சொந்த திசுக்களைப் பயன்படுத்துவதனூடாக மார்பகத்தை புனரமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.  

அதுவரை நடத்தப்பட்ட அனைத்துப் பரிசோதனைகள் மற்றும் அறிக்கைகளை ஆராய்கையில், உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவியதற்கான எந்த அறிகுறியும் இல்லாவிட்டாலும், microscopically உடலின் உட்புறத்தை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளமையால் கீமோதெரபி, இம்யூனோதெரபி, புற்றுநோய்க்கான இலக்கு சிகிச்சை (Targeted therapy), ஹார்மோன் சிகிச்சைகள் மற்றும் பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள், சாதாரண பெண்களைப் போல் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தினை பெற்ற கதைகள் உண்டு. அதே சமயம் துரதிர்ஷ்டவசமாக புற்றுநோய் உடல் முழுவதும் பரவிய பெண்களையும் நாம் சந்திக்கிறோம். நிலையான நர்சிங் முறைகள் மூலம், இந்தப் பெண்களுக்கு நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும் திறன் எங்களிடம் உள்ளது. இந்த நிலையான நடைமுறைகளுக்கும் அதிகப்படியான பாலியேட்டிவ் கேர் எனப்படும் ஒரு முக்கிய சிகிச்சை வகையுள்ளது. இந்த சிகிச்சை மரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கானது என்ற ஒரு தவறான கருத்து பரவலாக காணப்படுகிறது. இந்த சிகிச்சையானது புற்றுநோயைக் கண்டறியும் போது மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டிய ஒன்றாகும். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு இந்த பாலியேட்டிவ் கேரின் விளைவு விலைமதிப்பற்றதாக இருக்கும், குறிப்பாக குணப்படுத்த முடியாத புற்றுநோயில் இருக்கும் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய ஆறுதல் மற்றும் கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில், அந்த நோய் நிலையை எதிர்கொள்வது மிகவும் சவாலானதாக மாறிவிடுகிறது. அவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அனுபவிக்கும் உடல், உள மற்றும் சமூக ரீதியான இன்னல்கள் இந்த  பாலியேட்டிவ் கேரின் மூலம் சற்று குறைக்கப்படுகிறது.

உங்கள் தாய், சகோதரி, பாட்டி அல்லது உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு பெண் கூட மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்தில் இருக்கக்கூடும் என்பதால், மார்பகப் புற்றுநோயைப் பற்றிய கல்வி மற்றும் விழிப்புணர்வு நம் அனைவருக்கும் அவசியமானது. பெண்கள் தங்கள் மார்பகங்களில் கவனம் செலுத்தி, அதனை தொடர்ந்து பரிசோதித்து அவதானமாக இருப்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயை முழுமையாக வெற்றி பெற முடியும்!!

டாக்டர்.ஷாமா குணதிலக்க
MBBS (கொழும்பு) MD (கொழும்பு) SLMC Reg No. 17334,
மருத்துவ ஆலோசகர் புற்றுநோயியல் நிபுணர்
மருத்துவ துறை தலைவர்
ஆசிரி AOI புற்றுநோய் மையம்

Author

Write A Comment