இன்று நாம் அடிக்கடி கேள்வியுறும் நோய்த்தொற்றாக சிறுநீர் தொற்று மாறி வருகிறது. சிறுநீர் தொற்றினால் ஆண்களை விட அதிகளவான பெண்களே பாதிக்கப்படுகின்றனர். சுமார் 50 இலிருந்து 60 சதவீதமான பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் சிறுநீர் தொற்றுக்கு முகங்கொடுக்க நேர்கிறது. சிறுநீர் தொற்று நம் அனைவருக்கும் பழக்கப்பட்ட சொல்லாக இருந்த போதும் அது பற்றிய போதியளவு புரிதல் நம்மிடம் இல்லாமை, நாம் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள காரணமாகிறது. இந்த பதிவினூடாக சிறுநீர் தொற்று என்றால் என்ன?, சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள், சிறுநீர் தொற்றுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் என்ன என்பதை பார்ப்போம்.  

சிறுநீர் தொற்று என்றால் என்ன?

சிறுநீர் வெளியேறும் பாதையில் பாக்டீரியாக்களால் ஏற்படுகின்ற தொற்றை  நாம் சிறுநீர் தொற்று என்கிறோம். நம் உடலில் ஏற்படும் தொற்றுக்களில் சிறுநீர் தொற்றே இரண்டாவது பிரதான தொற்றாகும்.

சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள்

சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள் தொற்றுக்குள்ளானவரின் வயது, தொற்றுக்குள்ளான உடற் பாகம் மற்றும் தொற்றின் நிலை  என்பவற்றுக்கு ஏற்ப வேறுபடுகிறது. அதனடிப்படையில்,

01.சிறுநீர் தொற்றின் ஆரம்ப நிலை,

சிறுநீர் கழிக்கும் போது, சிறுநீர் வெளியேறும் பகுதியில் கடுகடுப்பும் எரிச்சலும் வலியும் ஏற்படல்.
அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு.

லேசான காய்ச்சல். சிறுநீரின் மணம் மற்றும் நிறத்தில் வித்தியாசம் தெரிதல்.

02. சிறுநீர்ப்பை தொற்றுக்குள்ளாகுதல்  

சிறுநீருடன் குருதி வெளியேறல்.
அடிவயிற்றில் வலி ஏற்படல்.
சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் வெளியேறும் பகுதியில் வலி ஏற்படல்.
அடிக்கடி சொட்டு சொட்டாக சிறுநீர் கழித்தல்.

03. மேற்புறமுள்ள சிறுநீர்ப்பாதை தொற்றுக்குள்ளாகுதல்

தீவிரமான காய்ச்சல்.
உடற்சோர்வு.
அசௌகரிய உணர்வு.
வாந்தி எடுத்தல்.
முதுகின் மேற்புறத்தில் வலி ஏற்படல்.

சிறுநீர் தொற்றுக்கான காரணங்கள்

உடலுக்கு தேவையானளவு நீர் அருந்தாமை.
சிறுநீர் வெளியேறும் பாதையில் ஏற்படும் அடைப்பு.
முறையில்லா தேநீர், காபி பழக்கம்.
சிறுநீர்ப்பையில் உருவாகும் கற்கள்.
ஈரமான உள்ளாடைகளை பயன்படுத்தல்.
மாதவிடாய் காலங்களில் சரியான நேர எல்லைக்குள் நாப்கினை மாற்றாமை.
நீரிழிவு நோய்.
சிறுநீரை கட்டுப்படுத்தல்.
ஹார்மோன் சமநிலையின்மை.

சிறுநீர் தொற்றுக்கான தீர்வுகள்

சிறுநீர் தொற்றின் ஆரம்ப நிலையில் சில உணவுகளை உள்ளெடுப்பதாலும், வாழ்வியல் நடைமுறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதாலும் நிவாரணம் பெற முடியும். அவையாவன,

01. உடலுக்கு தேவயானளவு தண்ணீரை அருந்துதல்

நம் உடலுக்கு தேவையானளவு தண்ணீரை அருந்துவதன் மூலம் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். இதனால் சிறுநீர் தொற்று தீவிரமடையாமல் கட்டுப்படுத்துவதோடு தண்ணீர் குடிப்பதால் அதிகளவான சிறுநீர் வேகமாக வெளியேறுகையில், சிறுநீரிலுள்ள பாக்டீரியா சிறுநீருடன் அடித்துச் செல்லப்படுகிறது.

02. விட்டமின் C

விட்டமின் C அடங்கியுள்ள பழங்களான தோடம்பழம், திராட்சை, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, கிவி மற்றும் காய்கறிகளான ப்ரோக்கோலி, தக்காளி, கோவா, முட்டைக்கோஸ் போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் சிறுநீரில்  தேக்கமடையும் பாக்டீரியாக்களை அழிக்க முடியும்.

03.இளநீர்

இரவில் தூங்குவதற்கு முன் இளநீரில் சிறிது சீரகம் சேர்த்து ஊறவையுங்கள். காலையில் எழுந்து சீரகமிட்டு ஊறவைத்த இளநீரை அருந்துங்கள். இவ்வாறு செய்வதால் சிறுநீர் சரியான அளவு வெளியேறுவதோடு நாளடைவில் சிறுநீர் தொற்றும் குணமாகிறது.

04.ப்ரோபயாடிக்ஸ் (Probiotics)

நம் உடல் நோய்த்தொற்றுக்களுக்கு எதிராக செயற்பட நோயெதிர்ப்பு சக்தி அவசியமாகும். ப்ரோபயாடிக்ஸ் அடங்கியுள்ள உணவுகளான தயிர், யோகர்ட் மற்றும் மோர் போன்றவற்றை உட்கொள்வதனூடாக உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களை வளர்த்துக் கொள்ள முடியும். இது சிறுநீர் தொற்று தீவிரமடையாமலும் விரைவில் தொற்றிலிருந்து நிவாரணம் பெறவும் உதவும்.

05.கற்றாழை

சிறுநீர் தொற்றினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் சிறுநீர் கழிப்பதில் உள்ள சிரமத்தினை, கற்றாழையை சுத்தம் செய்து உட்கொள்வதனூடாக குறைத்துக் கொள்ள முடியும்.

06.சுத்தம்

சிறுநீர் தொற்றின் பின் வழமையான நாட்களை விட சுத்தமாக இருப்பதில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும். உலர்ந்த தூய்மையான ஆடைகளை அணிவதோடு, சிறுநீர் வாசல் மற்றும் மல வாசல்களை எப்போதும்  சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

07.பார்லி கஞ்சி

உடலுக்கு பல விதமான நலன்மைகளை தரக் கூடிய பார்லி கஞ்சி, சிறுநீர் தொற்றுக்கும் ஓர் சிறந்த நிவாரணியாகும். பார்லி கஞ்சி செய்வதற்க்கு,

தேவையான பொருட்கள்

ஒரு கப் பார்லி
இரண்டு கப் தண்ணீர்
தேவையானளவு உப்பு

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு தடிமனான பாத்திரத்தை வைத்து நன்கு சூடாக்கிக்  கொள்ள வேண்டும். பாத்திரம் சூடான பின் தீயின் அளவை நன்றாக குறைத்துக் கொள்ள வேண்டும். சூடாகவுள்ள கடாயில் பார்லியை வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்தெடுத்த பார்லியை ரவை மாதிரியாக வரும்படி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பில் அடிகனமான பாத்திரமொன்றை வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீரானது கொதிக்கும் போது, தீயினை நன்றாக குறைத்து வைத்து விட்டு, பொடியாக்கப்பட்ட பார்லியை  சேர்த்து கொதிக்க விடவும். பார்லி முக்கால்வாசி வெந்து வரும் போது தேவையான உப்பினை சேர்த்து மீதி கால்வாசி பதத்தினையும் வேக விடவும். முழுமையாக வெந்த பின் அடுப்பினை நிறுத்தி பார்லி கஞ்சியை இறக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது பார்லி கஞ்சி பரிமாற தயார்.

சிறுநீர் தொற்றின் ஆரம்ப நிலையில் இவற்றை செய்து வருவதால், தொற்று பரவாமல் தடுத்து நிவாரணமும் பெற முடியும். சிறுநீர் தொற்று தீவிரமடைந்துள்ளமைக்கான அறிகுறிகளை கண்டறிவீர்களாயின் வைத்திய நிபுணரை நாடுதல் சிறந்த தீர்வாக அமையும்.

Sources:
https://updatetamil.com/barley-rice-benefits-in-tamil
https://tamil.asianetnews.com/health-food/how-to-prepare-barley-kanji-in-tamil-rkvlb6
https://www.popxo.com/2019/11/urinary-infection-symptoms-causes-home-remedies-in-tamil
https://www.google.com/search?q=vitamin+c+vegetables&authuser=4
https://www.herzindagi.com/tamil/health/what-are-the-benefits-of-taking-probiotics-article-226321
https://tamil.samayam.com/lifestyle/health/health-benefits-of-vitamin-b6-in-tamil/articleshow/81987132.cms
Author

Write A Comment