கொலஸ்ட்ரால் என்பது உடலில் உள்ள அனைத்து செல்களிலும் காணப்படும் ஒரு கொழுப்பு போன்ற பொருள். நம் உடல் உறுப்பான கல்லீரல் கொலஸ்ட்ராலை உருவாக்குகிறது. உடலின் பல செயற்பாடுகளுக்கு கொழுப்புச்சத்து அவசியமாகும் ஆனால் குருதியில் கொலஸ்ட்ரால் அதிகமாக காணப்படுமானால், இதய நோய்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம். நம் குருதியில் காணப்படும் கொலஸ்ட்ரால் வகைகள், HDL எனப்படும் கொலஸ்ட்ரால், இது உடலுக்கு நன்மை தரக் கூடியது. ஆகையால் அதன் அளவு அதிகமாக காணப்படுமானால், அதை குறித்து கவலைக் கொள்ள வேண்டியதில்லை. இது குருதி நாளங்களில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்குகிறது. LDL, VLDL மற்றும் டிரைகிளிசரைட் எனப்படும் கொலஸ்ட்ரால் வகைகள், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை. இவை குருதி நாளங்களில் படிந்து அடைப்புகளை உருவாக்க கூடியவை. இவை குருதியில் அதிகமாக காணப்படுமானால், அவற்றை குறைப்பதில் விஷேட கவனம் செலுத்துதல் வேண்டும்.
குருதியில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு கண்டறிவது?
லிப்போபுரோட்டீன் (lipoprotein) பேனல் எனப்படும் குருதிப் பரிசோதனையின் மூலம் குருதியில் உள்ள கொழுப்பின் அளவை கண்டறியலாம். பரிசோதனைக்கு முன், 9 முதல் 12 மணி நேரம் தண்ணீரைத் தவிர வேறு எதையும் சாப்பிடாமல் குடிக்காமல் இருக்க வேண்டும். கொலஸ்ட்ரால் அளவானது ஒரு டெசிலிட்டருக்கு மில்லிகிராம்களில் (mg/dL) அளவிடப்படும்.
குருதியில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான கட்டுப்படுத்தக் கூடிய காரணங்களும் தீர்வுகளும்
01.முறையில்லா உணவுப்பழக்கவழக்கம்
அதிக saturated fatty acids உள்ள எண்ணெய்களான கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாம் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுதல். அதிகமான கொழுப்புச்சத்து விகிதம் காணப்படுகின்ற பலகாரங்கள், பிரியாணி மற்றும் துரித உணவுகளை உட்கொள்ளல். உணவு சமைக்கும் போது தாளிப்பதற்கு அதிகளவான எண்ணெயை பயன்படுத்தல்.
இதற்கு தீர்வாக அதிக unsaturated fatty acids கொண்ட நல்லெண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். நாளாந்தம் நாம் உண்ணும் உணவினை சமைக்கும் போது அதை தாளிப்பதற்கு பயன்படுத்தும் எண்ணெயின் அளவில் கவனம் செலுத்த வேண்டும். முறையான உணவு வேளைகளை திட்டமிட்டு பின்பற்றுதல் வேண்டும்.
02.அதிகப்படியான உடல் எடை
உங்களுடைய அதிகப்படியான உடல் எடைக்கு குருதியில் உள்ள பாதகமான விளைவுகளை தரக்கூடிய LDL, VLDL மற்றும் டிரைகிளிசரைட் எனப்படும் கொலஸ்ட்ரால் வகைகளும் ஒரு காரணம். இதனால் பிறரை விட உடல் எடை அதிகமாக உள்ளோருக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதற்கு தீர்வாக உடல் எடையை குறைக்க முயற்சிகள் எடுப்பதோடு, BMIக்கு பொருத்தமான உடல் எடையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்கும் போது LDL, VLDL மற்றும் டிரைகிளிசரைட் எனப்படும் கொலஸ்ட்ரால் வகைகள் குறைந்து நல்ல கொலஸ்ட்ராலான HDL அதிகரிக்கும்.
03.உடற்பயிற்சி போதாமை
முறையான உடற்பயிற்சியினூடாக நம் குருதியில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும். நாளாந்தம் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சிக்கென செலவிட முயற்சியுங்கள்.
04. புகைபிடித்தல்.
சிகரெட் புகைத்தல் உங்கள் HDL அளவை குறைக்கிறது. குருதி நாளங்களிலிருந்து கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகின்ற HDL குறைவடைவதனால், குருதி நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனை தடுக்க புகைப்பிடித்தலை நிறுத்துதல் அவசியம்.
குருதியில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான கட்டுப்படுத்த முடியாத காரணங்கள்
01. ஒருவரின் வயது மற்றும் பாலினம்.
பெண்கள் மற்றும் ஆண்கள் வயதாகும்போது, அவர்களின் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. மாதவிடாய் நிற்பதற்கு முன், அதே வயதுடைய ஆண்களை விட பெண்களின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருக்கும். மாதவிடாய் நின்ற பின், பெண்களின் LDL (கெட்ட) கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்.
02. ஒருவரின் பரம்பரை.
உங்கள் உடல் எவ்வளவு கொலஸ்ட்ராலை உருவாக்குகிறது என்பதை உங்கள் மரபணுக்களும் தீர்மானிக்கின்றன. உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் உயர் குருதி கொலஸ்ட்ரால் இருந்தால் உங்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
03. ஒருவரின் இனம்.
ஒருவரின்இனம் கூட உயர் குருதி கொலஸ்ட்ராலுக்கான அபாயத்தை அதிகரிக்க கூடும். உதாரணமாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பொதுவாக வெள்ளையர்களைக் காட்டிலும் அதிக அளவான HDL மற்றும் LDL கொலஸ்ட்ராலை கொண்டுள்ளனர்.
நம் குருதியில் காணப்படும் அதிகப்படியான கொலாஸ்ட்ரால் அளவை, வைத்தியரிடம் சென்று பரிசோதித்து, அவர் அறிவுறுத்தலுக்கிணங்க மாத்திரைகளை உட்கொள்வதனூடாகவும் முறையான உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சி ஆகிவற்றை தொடர்வதனூடாகவும் குறைத்துக் கொள்ள முடியும்.
Source:https://medlineplus.gov/cholesterollevelswhatyouneedtoknow.html