Author

admin

Browsing

பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் தூண்டுதலால் 28 நாட்களுக்கு ஒரு முறை வலது அல்லது இடது சூலகத்திலிருந்து ஒரு முதிர்ந்த சூல் பலோப்பியன் குழாயினூடாக கருப்பையை வந்தடைகிறது. அவ்வாறு கருப்பையை வந்தடையும் சூல், விந்துடன் சேராதவிடத்து சிதைவுக்குள்ளாகி யோனி வழியூடாக குருதியாக வெளியேறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இந்த மாதவிடாய் காலங்களில் இரத்தப்போக்கு அதிகமாக இருப்பதனால், பெண்கள் உடலளவில் பலவீனமடைகிறார்கள். இதனால் ஏற்படும் வலி, அசௌகரிய உணர்வு மற்றும் மாதவிடாய் காலங்களில் ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்கள் என்பன அவர்களை  மனதளவிலும் பாதிக்கின்றது. பெண்கள் தமது மாதவிடாய் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான பழக்கவழக்கங்களில் உணவுத் தெரிவு முக்கிய இடம்  வகிக்கின்றது. அவ்வாறு சரியான உணவை தெரிவு செய்யத் தவறும் பட்சத்தில் அவர்கள் உடல்  மேலும் பலவீனமடைவதோடு கருப்பையும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உருவாகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் உட்கொள்ள வேண்டியவை.

திரவ ஆகாரம் 

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியினை தடுக்க, வயிறை காயவிடமால் வைத்திருத்தல் வேண்டும். இதற்கு அதிகமான திரவத்தினை பருக வேண்டும். அதுவும் மாதவிடாய் காலங்களில் 8 இலிருந்து 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியமாகும். தண்ணீர் மட்டுமன்றி மோர், பழச்சாறு மற்றும் பால் போன்ற திரவ ஆகாரங்களையும் பருகலாம்.

கல்சியம் அடங்கிய உணவுகள்

மாதவிடாய் காலங்களில் கால் இழுப்பது போன்ற உணர்வு, வயிறு வலி மற்றும் தசை பிடித்துக் கொள்வது போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற அதிகம் கல்சியம் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். வெண்டிக்காய், பாதாம், பால் மற்றும் கீரை வகைகள் போன்றவற்றை உட்கொள்வதனூடாக  உடலுக்கு தேவையான கல்சிய சத்தினை  பெற்றுக் கொள்ள முடியும்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்

மாதவிடாய் காலங்களில் குருதிப்போக்கு அதிகமாக இருப்பதனால், உடலின் ஹீமோகுளோபின் இழப்பின் விகிதம் அதிகமாகிறது. இதனை ஈடுசெய்வதற்காக இரும்புச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்ளவது அவசியமாகும். அவ்வாறு தவறும் பட்சத்தில் குருதிசோகைக்கு ஆளாக நேரிடும். மாதவிடாய் காலங்களில் உலர்ந்த திராட்சை, பீன்ஸ் வகைகள், மத்தி மீன், சிவப்பு அரிசி, பேரீச்சம்பழம், ஆப்பிள் மற்றும் மாதுளம் பழம் போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் இரும்பு சத்தினை பெற்றுக் கொள்ள முடியும்.

விட்டமின் B6 உணவுகள்

விட்டமின் B6 ஆனது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மற்றைய  உணவுகளை விட கரட்டில் அதிகளவான விட்டமின் B6 அடங்கியுள்ளது. மாதவிடாய் காலங்களில் முடிந்தளவு கரட்டினை உட்கொள்ளுவதனூடாக நோய் தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாக்க தேவையான விட்டமின் B6 இனை பெற்றுக்

விட்டமின் D உணவுகள்

விட்டமின் D ஆனது எலும்புகளை வலு செய்ய உதவுகிறது. மாதவிடாய் காலங்களில் ஆரஞ்சு, அவல், காளான் மற்றும் முட்டை ஆகிய உணவுகளை உட்கொள்ளவதனூடாக எலும்புகளுக்கு தேவையான விட்டமின் D இனை பெற்றுக் கொள்ள முடியும்.

சாக்லேட்டுகள்

நாம் மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக இருக்க மூளையில் செரட்டோனின் என்ற அமிலச்சுரப்பு அவசியமாகும். டார்க்  சாக்லேட்டுகள் செரட்டோனை அதிகளவில் சுரக்க செய்கிறது. மாதவிடாய் காலங்களில் டார்க்  சாக்லேட்டுகளை உட்கொள்வதனால் பதற்றம், மன அழுத்தம் ஆகியன கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வரப்படுகின்றன. 

நார் உணவுகள்

மாதவிடாய் காலங்களில் சாப்பிடுவதில் சிரமத்தை ஏற்படுத்துவதாக செரிமான பிரச்சினை திகழ்கிறது. இதனால் உடலுக்கு தேவையான சத்துணவுகளை உட்கொள்ள முடியமால் போவதோடு வலியும் சோர்வும் அதிகமாகிறது. மாதவிடாய் காலங்களில் உணவில் பட்டாணி, கோதுமை, ரெட் பீன்ஸ், அவகாடோ, கொய்யா, ப்ராக்கோலி, மாம்பழம் மற்றும் போஞ்சி போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வதனூடாக செரிமான பிரச்சினையை தீர்க்க முடியும். 

மாதவிடாய் காலங்களில் நீங்கள் மறந்தும் உள்ளெடுக்கக் கூடாத உணவுகள்

அதிகம் கொழுப்பு அடங்கிய உணவுகளை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் இவை ஈஸ்திரஜன் ஹார்மோனை தூண்டி குருதிப்போக்கை அதிகரிக்கிறது. முடிந்தளவு மாதவிடாய் காலங்களில் கொழுப்பு உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உள்ளெடுத்துக் கொள்ளுங்கள். மேலும் உணவு பழக்கவழக்கத்தோடு சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.

Sources:
https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/iron-rich-foods-in-tamil
https://ta.vikaspedia.in/health/women-health/baabc6ba3bcdb95bb3bbfba9bcd-baabb0bc1bb5-b9abc1b95bbeba4bb0baebcd/baebbeba4bb5bbfb9fbbebafbbfba9bcd-baaba4bc1-baabbfba9bcdbaabb1bcdbb1-bb5bc7ba3bcdb9fbbfbafbb5bc8
https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/vitamin-d-foods-in-tamil
https://www.pothunalam.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%87%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/what-to-eat-during-menstruation-period-in-tamil
https://www.uxtamil.com/2022/09/blog-post_5.html
https://www.bbc.com/tamil/global-59667874#:~:text=%22%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%20%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.&text=%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%2C%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81 .

இன்று நாம் அடிக்கடி கேள்வியுறும் நோய்த்தொற்றாக சிறுநீர் தொற்று மாறி வருகிறது. சிறுநீர் தொற்றினால் ஆண்களை விட அதிகளவான பெண்களே பாதிக்கப்படுகின்றனர். சுமார் 50 இலிருந்து 60 சதவீதமான பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் சிறுநீர் தொற்றுக்கு முகங்கொடுக்க நேர்கிறது. சிறுநீர் தொற்று நம் அனைவருக்கும் பழக்கப்பட்ட சொல்லாக இருந்த போதும் அது பற்றிய போதியளவு புரிதல் நம்மிடம் இல்லாமை, நாம் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள காரணமாகிறது. இந்த பதிவினூடாக சிறுநீர் தொற்று என்றால் என்ன?, சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள், சிறுநீர் தொற்றுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் என்ன என்பதை பார்ப்போம்.  

சிறுநீர் தொற்று என்றால் என்ன?

சிறுநீர் வெளியேறும் பாதையில் பாக்டீரியாக்களால் ஏற்படுகின்ற தொற்றை  நாம் சிறுநீர் தொற்று என்கிறோம். நம் உடலில் ஏற்படும் தொற்றுக்களில் சிறுநீர் தொற்றே இரண்டாவது பிரதான தொற்றாகும்.

சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள்

சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள் தொற்றுக்குள்ளானவரின் வயது, தொற்றுக்குள்ளான உடற் பாகம் மற்றும் தொற்றின் நிலை  என்பவற்றுக்கு ஏற்ப வேறுபடுகிறது. அதனடிப்படையில்,

01.சிறுநீர் தொற்றின் ஆரம்ப நிலை,

சிறுநீர் கழிக்கும் போது, சிறுநீர் வெளியேறும் பகுதியில் கடுகடுப்பும் எரிச்சலும் வலியும் ஏற்படல்.
அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு.

லேசான காய்ச்சல். சிறுநீரின் மணம் மற்றும் நிறத்தில் வித்தியாசம் தெரிதல்.

02. சிறுநீர்ப்பை தொற்றுக்குள்ளாகுதல்  

சிறுநீருடன் குருதி வெளியேறல்.
அடிவயிற்றில் வலி ஏற்படல்.
சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் வெளியேறும் பகுதியில் வலி ஏற்படல்.
அடிக்கடி சொட்டு சொட்டாக சிறுநீர் கழித்தல்.

03. மேற்புறமுள்ள சிறுநீர்ப்பாதை தொற்றுக்குள்ளாகுதல்

தீவிரமான காய்ச்சல்.
உடற்சோர்வு.
அசௌகரிய உணர்வு.
வாந்தி எடுத்தல்.
முதுகின் மேற்புறத்தில் வலி ஏற்படல்.

சிறுநீர் தொற்றுக்கான காரணங்கள்

உடலுக்கு தேவையானளவு நீர் அருந்தாமை.
சிறுநீர் வெளியேறும் பாதையில் ஏற்படும் அடைப்பு.
முறையில்லா தேநீர், காபி பழக்கம்.
சிறுநீர்ப்பையில் உருவாகும் கற்கள்.
ஈரமான உள்ளாடைகளை பயன்படுத்தல்.
மாதவிடாய் காலங்களில் சரியான நேர எல்லைக்குள் நாப்கினை மாற்றாமை.
நீரிழிவு நோய்.
சிறுநீரை கட்டுப்படுத்தல்.
ஹார்மோன் சமநிலையின்மை.

சிறுநீர் தொற்றுக்கான தீர்வுகள்

சிறுநீர் தொற்றின் ஆரம்ப நிலையில் சில உணவுகளை உள்ளெடுப்பதாலும், வாழ்வியல் நடைமுறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதாலும் நிவாரணம் பெற முடியும். அவையாவன,

01. உடலுக்கு தேவயானளவு தண்ணீரை அருந்துதல்

நம் உடலுக்கு தேவையானளவு தண்ணீரை அருந்துவதன் மூலம் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். இதனால் சிறுநீர் தொற்று தீவிரமடையாமல் கட்டுப்படுத்துவதோடு தண்ணீர் குடிப்பதால் அதிகளவான சிறுநீர் வேகமாக வெளியேறுகையில், சிறுநீரிலுள்ள பாக்டீரியா சிறுநீருடன் அடித்துச் செல்லப்படுகிறது.

02. விட்டமின் C

விட்டமின் C அடங்கியுள்ள பழங்களான தோடம்பழம், திராட்சை, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, கிவி மற்றும் காய்கறிகளான ப்ரோக்கோலி, தக்காளி, கோவா, முட்டைக்கோஸ் போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் சிறுநீரில்  தேக்கமடையும் பாக்டீரியாக்களை அழிக்க முடியும்.

03.இளநீர்

இரவில் தூங்குவதற்கு முன் இளநீரில் சிறிது சீரகம் சேர்த்து ஊறவையுங்கள். காலையில் எழுந்து சீரகமிட்டு ஊறவைத்த இளநீரை அருந்துங்கள். இவ்வாறு செய்வதால் சிறுநீர் சரியான அளவு வெளியேறுவதோடு நாளடைவில் சிறுநீர் தொற்றும் குணமாகிறது.

04.ப்ரோபயாடிக்ஸ் (Probiotics)

நம் உடல் நோய்த்தொற்றுக்களுக்கு எதிராக செயற்பட நோயெதிர்ப்பு சக்தி அவசியமாகும். ப்ரோபயாடிக்ஸ் அடங்கியுள்ள உணவுகளான தயிர், யோகர்ட் மற்றும் மோர் போன்றவற்றை உட்கொள்வதனூடாக உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களை வளர்த்துக் கொள்ள முடியும். இது சிறுநீர் தொற்று தீவிரமடையாமலும் விரைவில் தொற்றிலிருந்து நிவாரணம் பெறவும் உதவும்.

05.கற்றாழை

சிறுநீர் தொற்றினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் சிறுநீர் கழிப்பதில் உள்ள சிரமத்தினை, கற்றாழையை சுத்தம் செய்து உட்கொள்வதனூடாக குறைத்துக் கொள்ள முடியும்.

06.சுத்தம்

சிறுநீர் தொற்றின் பின் வழமையான நாட்களை விட சுத்தமாக இருப்பதில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும். உலர்ந்த தூய்மையான ஆடைகளை அணிவதோடு, சிறுநீர் வாசல் மற்றும் மல வாசல்களை எப்போதும்  சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

07.பார்லி கஞ்சி

உடலுக்கு பல விதமான நலன்மைகளை தரக் கூடிய பார்லி கஞ்சி, சிறுநீர் தொற்றுக்கும் ஓர் சிறந்த நிவாரணியாகும். பார்லி கஞ்சி செய்வதற்க்கு,

தேவையான பொருட்கள்

ஒரு கப் பார்லி
இரண்டு கப் தண்ணீர்
தேவையானளவு உப்பு

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு தடிமனான பாத்திரத்தை வைத்து நன்கு சூடாக்கிக்  கொள்ள வேண்டும். பாத்திரம் சூடான பின் தீயின் அளவை நன்றாக குறைத்துக் கொள்ள வேண்டும். சூடாகவுள்ள கடாயில் பார்லியை வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்தெடுத்த பார்லியை ரவை மாதிரியாக வரும்படி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பில் அடிகனமான பாத்திரமொன்றை வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீரானது கொதிக்கும் போது, தீயினை நன்றாக குறைத்து வைத்து விட்டு, பொடியாக்கப்பட்ட பார்லியை  சேர்த்து கொதிக்க விடவும். பார்லி முக்கால்வாசி வெந்து வரும் போது தேவையான உப்பினை சேர்த்து மீதி கால்வாசி பதத்தினையும் வேக விடவும். முழுமையாக வெந்த பின் அடுப்பினை நிறுத்தி பார்லி கஞ்சியை இறக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது பார்லி கஞ்சி பரிமாற தயார்.

சிறுநீர் தொற்றின் ஆரம்ப நிலையில் இவற்றை செய்து வருவதால், தொற்று பரவாமல் தடுத்து நிவாரணமும் பெற முடியும். சிறுநீர் தொற்று தீவிரமடைந்துள்ளமைக்கான அறிகுறிகளை கண்டறிவீர்களாயின் வைத்திய நிபுணரை நாடுதல் சிறந்த தீர்வாக அமையும்.

Sources:
https://updatetamil.com/barley-rice-benefits-in-tamil
https://tamil.asianetnews.com/health-food/how-to-prepare-barley-kanji-in-tamil-rkvlb6
https://www.popxo.com/2019/11/urinary-infection-symptoms-causes-home-remedies-in-tamil
https://www.google.com/search?q=vitamin+c+vegetables&authuser=4
https://www.herzindagi.com/tamil/health/what-are-the-benefits-of-taking-probiotics-article-226321
https://tamil.samayam.com/lifestyle/health/health-benefits-of-vitamin-b6-in-tamil/articleshow/81987132.cms




கொலஸ்ட்ரால் என்பது உடலில் உள்ள அனைத்து செல்களிலும் காணப்படும் ஒரு கொழுப்பு போன்ற பொருள். நம் உடல் உறுப்பான கல்லீரல் கொலஸ்ட்ராலை உருவாக்குகிறது. உடலின் பல செயற்பாடுகளுக்கு கொழுப்புச்சத்து அவசியமாகும் ஆனால் குருதியில் கொலஸ்ட்ரால் அதிகமாக காணப்படுமானால், இதய நோய்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம். நம் குருதியில் காணப்படும் கொலஸ்ட்ரால் வகைகள், HDL எனப்படும் கொலஸ்ட்ரால், இது உடலுக்கு நன்மை தரக் கூடியது. ஆகையால் அதன் அளவு அதிகமாக காணப்படுமானால், அதை குறித்து  கவலைக் கொள்ள வேண்டியதில்லை. இது குருதி நாளங்களில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்குகிறது. LDL, VLDL மற்றும் டிரைகிளிசரைட் எனப்படும் கொலஸ்ட்ரால் வகைகள், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை. இவை குருதி நாளங்களில் படிந்து அடைப்புகளை உருவாக்க கூடியவை. இவை குருதியில் அதிகமாக காணப்படுமானால், அவற்றை குறைப்பதில் விஷேட கவனம் செலுத்துதல் வேண்டும்.

குருதியில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு கண்டறிவது?

லிப்போபுரோட்டீன் (lipoprotein) பேனல் எனப்படும் குருதிப் பரிசோதனையின் மூலம் குருதியில் உள்ள கொழுப்பின் அளவை கண்டறியலாம். பரிசோதனைக்கு முன்,  9 முதல் 12 மணி நேரம் தண்ணீரைத் தவிர வேறு எதையும் சாப்பிடாமல் குடிக்காமல் இருக்க வேண்டும். கொலஸ்ட்ரால் அளவானது ஒரு டெசிலிட்டருக்கு மில்லிகிராம்களில் (mg/dL) அளவிடப்படும். 

குருதியில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான கட்டுப்படுத்தக் கூடிய காரணங்களும் தீர்வுகளும்

01.முறையில்லா உணவுப்பழக்கவழக்கம்
அதிக saturated fatty acids உள்ள எண்ணெய்களான கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாம் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுதல். அதிகமான கொழுப்புச்சத்து விகிதம் காணப்படுகின்ற பலகாரங்கள், பிரியாணி மற்றும் துரித உணவுகளை உட்கொள்ளல். உணவு சமைக்கும் போது தாளிப்பதற்கு அதிகளவான எண்ணெயை பயன்படுத்தல்.

இதற்கு தீர்வாக அதிக unsaturated fatty acids கொண்ட நல்லெண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். நாளாந்தம் நாம் உண்ணும் உணவினை சமைக்கும் போது அதை தாளிப்பதற்கு பயன்படுத்தும் எண்ணெயின் அளவில் கவனம் செலுத்த வேண்டும். முறையான உணவு வேளைகளை திட்டமிட்டு பின்பற்றுதல் வேண்டும்.

02.அதிகப்படியான உடல் எடை
உங்களுடைய அதிகப்படியான உடல் எடைக்கு குருதியில் உள்ள பாதகமான விளைவுகளை தரக்கூடிய LDL, VLDL மற்றும் டிரைகிளிசரைட் எனப்படும் கொலஸ்ட்ரால் வகைகளும் ஒரு காரணம். இதனால் பிறரை விட உடல் எடை அதிகமாக உள்ளோருக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதற்கு தீர்வாக உடல் எடையை குறைக்க முயற்சிகள் எடுப்பதோடு, BMIக்கு பொருத்தமான உடல் எடையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்கும் போது LDL, VLDL மற்றும் டிரைகிளிசரைட் எனப்படும் கொலஸ்ட்ரால் வகைகள் குறைந்து நல்ல கொலஸ்ட்ராலான HDL அதிகரிக்கும்.

03.உடற்பயிற்சி போதாமை
முறையான உடற்பயிற்சியினூடாக நம் குருதியில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும். நாளாந்தம் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சிக்கென செலவிட முயற்சியுங்கள்.

04. புகைபிடித்தல்.
சிகரெட் புகைத்தல் உங்கள் HDL அளவை குறைக்கிறது. குருதி நாளங்களிலிருந்து கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகின்ற HDL குறைவடைவதனால், குருதி நாளங்களில்  கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனை தடுக்க புகைப்பிடித்தலை நிறுத்துதல் அவசியம்.

குருதியில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான கட்டுப்படுத்த முடியாத காரணங்கள்

01. ஒருவரின் வயது மற்றும் பாலினம்.
பெண்கள் மற்றும் ஆண்கள் வயதாகும்போது, ​​​​அவர்களின் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. மாதவிடாய் நிற்பதற்கு முன், அதே வயதுடைய ஆண்களை விட பெண்களின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருக்கும். மாதவிடாய் நின்ற பின், பெண்களின் LDL (கெட்ட) கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்.

02. ஒருவரின் பரம்பரை.
உங்கள் உடல் எவ்வளவு கொலஸ்ட்ராலை உருவாக்குகிறது என்பதை உங்கள் மரபணுக்களும் தீர்மானிக்கின்றன. உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் உயர் குருதி கொலஸ்ட்ரால் இருந்தால் உங்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

03. ஒருவரின் இனம்.
ஒருவரின்இனம் கூட உயர் குருதி கொலஸ்ட்ராலுக்கான அபாயத்தை அதிகரிக்க கூடும். உதாரணமாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பொதுவாக வெள்ளையர்களைக் காட்டிலும் அதிக அளவான HDL மற்றும் LDL  கொலஸ்ட்ராலை கொண்டுள்ளனர்.

நம் குருதியில் காணப்படும் அதிகப்படியான கொலாஸ்ட்ரால் அளவை, வைத்தியரிடம் சென்று பரிசோதித்து, அவர் அறிவுறுத்தலுக்கிணங்க மாத்திரைகளை உட்கொள்வதனூடாகவும் முறையான உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சி ஆகிவற்றை தொடர்வதனூடாகவும்  குறைத்துக் கொள்ள முடியும்.

Source:https://medlineplus.gov/cholesterollevelswhatyouneedtoknow.html

இன்று ஆண் பெண் என இரு பாலினரும் அதிகமாக கவலைக் கொள்ளும் விடயமாக முகப்பருக்கள் மாறி வருகின்றன. இது இளைஞர்களிடையே எந்த அளவு தீவிரமான தாக்கத்தினை  செலுத்துகிறதென்றால், முகப்பருக்களை போக்குவதற்கான தீர்வு என சந்தைகளில் எப்பொருளை விளம்பரப்படுத்தினாலும் உடனே தன்னிடமுள்ள கடைசி ரூபாய் வரை செலவழித்து அதை கொள்வனவு செய்ய தயாராக உள்ளனர். மருத்துவ நிபுணரின் பரிந்துரைகளின்றி விளம்பரங்களை நம்பி அழகு சாதன பொருட்களை கொள்வனவு செய்வதோடு இது நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி தெரிந்தவர்கள், இணையம் என பருக்களுக்கு தீர்வென குறிப்பிடும் அனைத்தையும் ஆராயாது முயற்சிக்க துணிந்து விட்டனர். தற்போது கருத்தடை மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின்றி பருக்களுக்காக உபயோகிக்கும் வழக்கம் பரவலாகி வருகிறது. உண்மையில், பருக்கள் வரக் காரணம் என்ன? அதற்கும் கருத்தடை மாத்திரைக்கும் என்ன தொடர்பு? முகப்பருக்களுக்கு கருத்தடை மாத்திரை தீர்வாக அமையுமா? போன்ற உங்களுடைய பல கேள்விகளுக்கான பதில்களை இப்பகுதியில் ஆராய்வோம்.

முகப்பருக்கள் வரக் காரணங்கள் 

நம் சருமத்தின் இரண்டாவது அடுக்கில் Sebaceous glands என குறிப்பிடப்படும் எண்ணெய்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன. ஆன்ட்ரஜன் ஹார்மோனின் தூண்டுதல் காரணமாக இந்த சுரப்பிகள் சீபத்தினை சுரக்கின்றன. ஆன்ட்ரஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும் போது இந்த சீபமும் அதிகமாக சுரக்கப்படுகிறது. இதனால் சருமத்தில் எண்ணெய்ப்பசை தன்மை அதிகரித்து வெளிப்புறத்திலுள்ள மாசுக்கள் எளிதில் சருமத்தில் ஒட்டிக் கொள்ளும். இதன் விளைவாக எண்ணெய் சுரப்பிகளின் வாய்ப்பகுதி மூடிக் கொள்வதால் சீபம் வெளிவர முடியாமல் பருக்களாக வெளித்தள்ளப்படும். இது தவிர பரம்பரை, சினைப்பையில் நீர்க்கட்டி (Poly Cystic Ovary) இருத்தல், மன அழுத்தம் மற்றும் மாதவிடாய் கால ஹார்மோன் சமநிலையின்மையும் முகப்பருக்கள் தோன்ற காரணமாக அமைகின்றன.

முகப்பருவும் கருத்தடை மாத்திரையும் 

முகப்பருக்கள் சருமத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலை ஏற்படுகையில் மகப்பேறு வைத்தியர் அல்லது தோல் வைத்திய நிபுணரை நாடுதல் ஒரு சிறந்த வழியாகும். அவர்கள் பருக்கான காரணங்களை பரிசோதனைகளின் மூலம் ஆராய்ந்து கண்டறிந்த பின், பருக்களுக்கு பிசிஓஎஸ், பிசிஓடி போன்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே, உடலில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையை சமன்படுத்த கருத்தடை மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர். இருப்பினும் கருத்தடை மாத்திரைகளை முதன்மையான தீர்வாக வைத்தியர்கள் பரிந்துரைப்பதில்லை.  

முகப்பருக்களுக்கு கருத்தடை மாத்திரை தீர்வாகுமா

மேற்குறிப்பிட்டவாறு பரிசோதனைகளின் அடிப்படையில் ஒருவரது முகப்பருக்களுக்கு பிசிஓஎஸ், பிசிஓடி போன்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இருக்குமானால் வைத்தியரின் பரிந்துரைப்படி கருத்தடை மாத்திரை உள்ளெடுப்பதன் காரணமாக உடலில் ஹார்மோன் சமநிலை பெற்று தானாகவே பருக்கள் குறையத் தொடங்கும். மறைமுக காரணமாகயிருக்கும் பிசிஓஎஸ், பிசிஓடி ஹார்மோன் பிரச்சினைகளுக்காக கருத்தடை மாத்திரை பரிந்துரைக்கப்படுகின்றனவே தவிர முகப்பருக்கும் கருத்தடை மாத்திரைக்கும் எந்தவொரு நேரடி தொடர்பும் கிடையாது. 

முகப்பருக்கள் வர பல காரணங்கள் இருப்பதனால் வைத்தியரின் பரிந்துரையின்றி கிறீம்கள் மற்றும் மாத்திரைகளை பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும். முறையான வைத்திய பரிசோதனைகளின்றி கிறீம்கள் மற்றும் மாத்திரைகளை உபயோகிப்பதனால் பருக்கள் வீரியமடையவும் மேலும் வேறு பல சரும பிரச்சனைகள் தோன்றவும் வாய்ப்புகள் அதிகம்.

முகப்பருக்களுக்கு தீர்வு என்ன?

முகப்பருக்களுக்கான தீர்வினை முடிவு செய்யும் முன் முறையான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் அவசியமாகும். அதனடிப்படையில் வைத்தியர் அறிவுறுத்தும் மருந்துகள்/கிறீம்களுடன் உங்கள் அன்றாட வாழ்விலும் ஆரோக்கியமான உணவு பழக்கம் மற்றும் நாளாந்த உடற்பயிற்சியையும் இணைத்தல் வேண்டும். நாளாந்த உணவு வேளைகளில் அதிகமான கொழுப்பு உணவுகள் மற்றும் துரித உணவுகளை தவிர்த்து பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் எடைக்கு தேவையான அளவு தண்ணீரை குடிப்பதை உறுதி செய்யுங்கள். மன அழுத்தங்களில் இருந்து வெளிவரவும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்கவும் தியானப் பயிற்சியில் ஈடுபடுங்கள்.

எந்த உடல் மற்றும் மனநிலை பிரச்சனைக்கும் வைத்தியரின் பரிந்துரையின்றி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்த்து, அந்த பிரச்சனைக்கான வைத்திய நிபுணரை நாடி முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

Sources:
https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/139891-.html https://tamil.samayam.com/lifestyle/health/birth-control-pill-for-acne-treatment-according-to-doctor/articleshow/100190441.cms?story=

இன்று கடந்த காலத்தை விட அதிகமாக புற்றுநோய் பற்றி கேள்விப்படுவது மட்டுமன்றி அதனால் மனிதர்களுள் ஏற்படும் பாதக விளைவுகளின் தாக்கமும் அதிகரித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. எதுஎவ்வாறிருப்பினும் கிடைக்கப் பெற்ற தரவுகளின் அடிப்படையில் நோக்குகையில் புற்றுநோயானது மனிதர்களுள் மட்டுமன்றி விலங்குகளிலுள்ளும் இனங்காணப்பட்டுள்ளது. புராதன புதைபடிவங்களில் காணப்படும் எலும்புக் கட்டிகள், எகிப்தில் மம்மி செய்யப்பட்ட மனித சடலங்களில் காணப்படும் புற்றுநோய் மற்றும் பண்டைய பதிவுகளில் எழுதப்பட்ட புற்றுநோய் பற்றிய பதிவுகள் ஆகியன புற்றுநோய் என்பது ஒரு புதிய நோய் அல்ல என்பதனை நமக்கு தெளிவுபடுத்துகிறது. 

2020 ஆம் ஆண்டில் மட்டும், உலகளவில் 19.3 மில்லியன் புதிய புற்றுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் அந்த ஆண்டில் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 10 மில்லியன் ஆகும். பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் உலகில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. முன்னர் நுரையீரல் புற்றுநோய் முதல் இடத்தில் இருந்தது, இப்போது அது புற்றுநோய் பரவலின் அடிப்படையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு, பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் வயிற்று புற்றுநோய் ஆகியவை இறங்கு வரிசையில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. நுரையீரல் புற்றுநோயானது உலகளவில் அதிக புற்றுநோய் இறப்புகளுக்கு காரணமாக உள்ளது. இது 2020 இல் 1.8 மில்லியன் உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது. இதனை அடுத்து புற்றுநோய் இறப்புகளை அதிகம் பதிவு செய்த புற்றுநோய்களாக பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய்கள் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது என்பது இன்று வரை பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய கேள்வி. சிலர் தமது பெற்றோரிடமிருந்து பெற்ற மரபணுக்களில் ஏற்படும் பிழையால் புற்றுநோய் ஏற்படுகிறது என்று எண்ணுகிறார்கள். அவர்கள் கூற முற்படுவது யாதெனில் புற்றுநோயை உண்டாக்கும் மரபணுக்களை பெற்றோரிடமிருந்து நேரடியாகப் பெற்றனர் என்பதாகும். இவ்வாறு ஏற்படும் புற்றுநோயின் விகிதம் 10% இற்கும் குறைவாகும். மக்கள் அப்படி நினைப்பதற்கு காரணம், புற்றுநோய் ஒரு மரபணு நோய் என்பதே ஆகும். சுமார் 90% புற்றுநோய்கள் கருத்தரித்த பின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பிறழ்வுகளால் தான் ஏற்படுகின்றன.

புற்றுநோயை உண்டாக்கும் மரபணு மாற்றங்களின் வளர்ச்சிக்கு பல காரணிகள் பங்களிக்கின்றன. பெரும்பாலான பிறழ்வுகள் தோராயமாக நிகழலாம். மகள் செல்களை உருவாக்க உடலின் பெற்றோர் செல்கள் பிரிக்கப்படும்போது, ​​டிஎன்ஏ பிரிக்கப்பட்டு மகள் செல்களுக்கு வழங்கப்படும், இம்முறையில் பிறழ்வுகள் ஏற்படலாம் ஆனால் செல்கள் இந்த பிறழ்வுகளை சரிசெய்ய மிகவும் சிக்கலான அமைப்பினை கொண்டுள்ளது. நீங்கள் வயதாகும்போது, ​​​​இந்த செயல்முறை பலவீனமடைகிறது. புற்றுநோய்க்கு வழிவகுக்கும் மரபணு மாற்றங்களின் மற்றொரு காரணம், உடலின் வெளிசூழலில் அல்லது உடலின் உட்சூழலில் உள்ள சில காரணிகளுக்கு மரபணுக்களின் வெளிப்பாடு ஆகும். அதனடிப்படையில் மொத்த புற்றுநோய் இறப்புகளில் 1/3 புகையிலை பயன்பாடு (சிகரெட், வெற்றிலை பயன்படுத்துதல் போன்றவை), உடற்பருமன், மது அருந்துதல், குறைவானளவு புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுதல் மற்றும் குறைவானளவு உடற்பயிற்சி ஆகியவற்றால் ஏற்படுகிறது. உலகின் ஏழ்மையான நாடுகளில் 30% புற்றுநோய்கள் புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் புரோட்டோசோவான் தொற்றுகளால் ஏற்படுகின்றன.

புற்றுநோய் வராமல் தடுக்க இரண்டு முக்கிய வழிமுறைகள் உள்ளன. ஒன்று, நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை கடைபிடித்தல். அதில் புகையிலை மற்றும் மது அருந்துதலை விடுத்தல், உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரித்தல், நாளாந்தம் உடற்பயிற்சி செய்தல், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுதல் போன்றவை அடங்கும். புற்று நோய் வரும்போது உடலில் ஏற்படும் ஆரம்ப மாற்றங்களைக் கண்டறிந்து அதற்குச் சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுப்பது மற்றுமொரு முறை.

கூடுதலாக, 1/3 புற்றுநோய்கள் பரவுவதற்கு முன்பே கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்கப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, கடைசி 1/3 புற்றுநோய்கள் குணப்படுத்த முடியாதவை. இதற்குக் காரணம் சில நேரங்களில் புற்றுநோயின் ஆபத்தான நிலையும், புற்றுநோயாளியின் வயது அல்லது பிற மருத்துவ நிலைமைகள் போன்ற காரணங்களால் சரியான சிகிச்சையினை அளிப்பது சிரமமாகிறது.

டாக்டர்.ஷாமா குணதிலக்க
MBBS (கொழும்பு) MD (கொழும்பு) SLMC Reg No. 17334,
மருத்துவ ஆலோசகர் புற்றுநோயியல் நிபுணர்
மருத்துவ துறை தலைவர்
ஆசிரி AOI புற்றுநோய் மையம்

மார்பக புற்றுநோயானது உலகில் காணப்படும் பொதுவான வகை புற்றுநோய்களில் ஒன்றாகும். இதனால் பல பெண்கள்  தம் வாழ்வை இழக்கின்றனர் . உலகில் நிகழ்கின்ற இறப்புகளுக்கான காரணங்களில் புற்றுநோய் குறிப்பாக மார்பக புற்றுநோய் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது. இலங்கையில் இந்நிலை பற்றி ஆராய்வோமேயானால் உலகின் மற்றைய பகுதிகளின் சூழ்நிலையே இலங்கையிலும் காணப்படுகின்றது. ஒரு நாளைக்கு 12 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதோடு அதில் இருவர் உயிரிழக்கின்றனர். துரதிஷ்டவசமாக, மார்பக புற்றுநோயுடன் தொடர்புடைய புற்றுநோய் வகைகள் தடுக்க முடியாதவை. 

அவ்வாறெனில், இதற்கு தீர்வு என்ன?

மார்பகப் புற்றுநோயானது மார்பகத்தில் வெளிப்புற அறிகுறிகளைக் காட்டுவதற்கு முன்பு அதனை கண்டறிய முடிந்தால் முழுமையாக குணப்படுத்திக் கொள்ள முடியும். 1980 வரை மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையின் தரம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதையும் அடைந்திருக்கவில்லை. அதாவது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை குணப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றாலும், நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதோ அல்லது முழுமையாக குணப்படுத்துவதோ சாத்தியமற்றதாக இருந்தது. அதன் பின்  மார்பகப் புற்றுநோயை கண்டறிய மற்றும் குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் மேம்படுத்தப்பட்டவுடன், அதிலிருந்து குணமாகும் நோயாளிகளின் விகிதம் கணிசமாக அதிகரித்தது. இதில் மிகப் பெரிய பங்கு மம்மோகிராஃபி டெஸ்டிங்கினை சேரும். இதனால் பெண்கள் தங்கள் மார்பகங்களில் வெளிப்புற அறிகுறிகளைக் கவனிப்பதற்கு அல்லது உணருவதற்கு முன்பே மார்பக புற்றுநோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்க்கான  வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாறு முன்கூட்டியே அறிவதனால் முறையான சிகிச்சைகளை மேற்கொண்டு  மார்பக புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடிந்தது. இதனால் முழு மார்பகங்களையும் அகற்றவோ அல்லது கீமோதெரபி போன்ற சிகிச்சைகளுக்கு உட் செல்ல வேண்டிய தேவையோ இருக்காது.

எந்த வயதினையுடைய பெண்கள் இந்த மம்மோகிராஃபி டெஸ்டிங்கினை மேற்கொள்ள வேண்டும்?

இலங்கையில் உள்ள மருத்துவர்களின் பரிந்துரைப்படி, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடந்தோறும் அல்லது குறைந்தது 2 வருடங்களுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசோதனையை செய்ய வேண்டும். எனினும், அதற்கான வாய்ப்புகள் இலங்கையில் இல்லை.

அவ்வாறெனில், இதற்கு மாற்று பரிசோதனை முறை என்ன?

இந்த பரிசோதனை முறையானது மம்மோகிராஃபி அளவுக்கு பயனுள்ளதாக இல்லை என்றாலும், 20 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் இதனைக் கொண்டு தங்கள் மார்பகங்களின் நிலையை சுயமாக பரிசோதிக்குமாறு அறிவுறுத்துகிறோம். எவ்வாறெனில், அவர்களது மாதாந்த மாதவிடாய் முடிந்து 7 – 10 நாட்கள் கடந்த பின் கண்ணாடியின் முன் மார்பகங்களைத் தாங்களாகவே அவதானிக்க வேண்டும், அவ்வாறு அவதானிக்கையில் மேற்பரப்பில் ஏதேனும் வழக்கத்துக்கு மாறான முறைகேடுகள், முலைக்காம்பிலிருந்து அசாதாரண வெளியேற்றம் அல்லது மார்பக புற்றுநோய்க்கான பிற அறிகுறிகள் தென்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். 

மார்பக புற்றுநோயை மருத்துவ நிபுணர் ஒருவரிடம் சென்று தனது மார்பகத்தை பரிசோதிப்பதனூடாகவும் கண்டறிந்துக் கொள்ளலாம். 20-39 வயதுடைய பெண்கள் 1-3 வருடங்களுக்கு ஒரு முறையும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடத்திற்கு ஒரு முறையும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த பரிசோதனை முறைகளும் கால எல்லைகளும் மார்பக புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்புகள் சாதாரண நிலையில் உள்ள பெண்களுக்கு மட்டுமே பொருத்தமானவை. 

ஏற்கனவே தனது தாய், சகோதரி அல்லது நெருங்கிய உறவினரின் மருத்துவ வரலாற்றில் மார்பக புற்றுநோய் பதிவாகியுள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மற்ற பெண்களை காட்டிலும் அதிகம். இவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து நிலையை சரியாக ஆராய்ந்த பின், சிலருக்கு 40 வயதிற்கு முன்பே மேமோகிராம் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாகவே 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மம்மோகிராஃபி பரிந்துரைக்கப்படுவதில்லை ஏனெனில் மம்மோகிராஃபி பரிசோதனையின் உணர்திறன் 40 வயதிற்குட்பட்ட பெண்களில் படிப்படியாக குறைகிறது. எனவே அவர்களுக்கு நாங்கள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் மார்பகங்களுக்கான எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியவற்றை மேற்கொள்கிறோம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஒரு சிறிய மாதிரியை எடுத்து பரிசோதிப்பதனூடாக, அது புற்றுநோயாக இருக்கிறதா என்று துல்லியமாக கண்டறிய முடியும். பரிசோதனையின் மூலம் சந்தேகம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், உடலின் மற்ற பகுதிகளுக்கும்  பரவியிருக்கிறதா என்பதை PET-CT ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறோம். இதற்க்கான இயந்திரம் தனியார் மற்றும் அரசு துறைகளில் தலா ஒன்று மட்டுமே இருப்பதால், இந்த பரிசோதனையும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே நடத்தப்படுகிறது. 

ஒவ்வொரு மார்பகப் புற்றுநோயாளிக்கும் CT ஸ்கேன் மற்றும் எலும்பு ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் முடிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கான சிறந்த சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்கிறோம். புற்றுநோய் வேறு உறுப்புகளுக்கு பரவவில்லை என்றால் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கிறோம். புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில், மார்பகத்தை முழுவதுமாக அகற்றாமல் புற்றுநோய்க்குள்ளான  பகுதியை மட்டும் அகற்றும் வாய்ப்பு உள்ளது-Breast Conservation Surgery. அந்த அறுவை சிகிச்சைக்குப் பின், மார்பகத்திற்கான கதிர்வீச்சு சிகிச்சையைத் தொடர்கிறோம். ஒருவேளை புற்றுநோய் மார்பகத்தில் பரவியிருக்கும் சதவீதம் அதிகமாக இருந்தால், மார்பகத்தை முழுவதுமாக அகற்றுவதைத் பரிந்துரைக்கிறோம். இருப்பினும் அது குறித்துக் கவலைக் கொள்ள வேண்டியதில்லை, இப்போது புரோஸ்டெடிக்ஸ் அல்லது அவற்றின் சொந்த திசுக்களைப் பயன்படுத்துவதனூடாக மார்பகத்தை புனரமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.  

அதுவரை நடத்தப்பட்ட அனைத்துப் பரிசோதனைகள் மற்றும் அறிக்கைகளை ஆராய்கையில், உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவியதற்கான எந்த அறிகுறியும் இல்லாவிட்டாலும், microscopically உடலின் உட்புறத்தை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளமையால் கீமோதெரபி, இம்யூனோதெரபி, புற்றுநோய்க்கான இலக்கு சிகிச்சை (Targeted therapy), ஹார்மோன் சிகிச்சைகள் மற்றும் பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள், சாதாரண பெண்களைப் போல் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தினை பெற்ற கதைகள் உண்டு. அதே சமயம் துரதிர்ஷ்டவசமாக புற்றுநோய் உடல் முழுவதும் பரவிய பெண்களையும் நாம் சந்திக்கிறோம். நிலையான நர்சிங் முறைகள் மூலம், இந்தப் பெண்களுக்கு நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும் திறன் எங்களிடம் உள்ளது. இந்த நிலையான நடைமுறைகளுக்கும் அதிகப்படியான பாலியேட்டிவ் கேர் எனப்படும் ஒரு முக்கிய சிகிச்சை வகையுள்ளது. இந்த சிகிச்சை மரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கானது என்ற ஒரு தவறான கருத்து பரவலாக காணப்படுகிறது. இந்த சிகிச்சையானது புற்றுநோயைக் கண்டறியும் போது மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டிய ஒன்றாகும். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு இந்த பாலியேட்டிவ் கேரின் விளைவு விலைமதிப்பற்றதாக இருக்கும், குறிப்பாக குணப்படுத்த முடியாத புற்றுநோயில் இருக்கும் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய ஆறுதல் மற்றும் கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில், அந்த நோய் நிலையை எதிர்கொள்வது மிகவும் சவாலானதாக மாறிவிடுகிறது. அவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அனுபவிக்கும் உடல், உள மற்றும் சமூக ரீதியான இன்னல்கள் இந்த  பாலியேட்டிவ் கேரின் மூலம் சற்று குறைக்கப்படுகிறது.

உங்கள் தாய், சகோதரி, பாட்டி அல்லது உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு பெண் கூட மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்தில் இருக்கக்கூடும் என்பதால், மார்பகப் புற்றுநோயைப் பற்றிய கல்வி மற்றும் விழிப்புணர்வு நம் அனைவருக்கும் அவசியமானது. பெண்கள் தங்கள் மார்பகங்களில் கவனம் செலுத்தி, அதனை தொடர்ந்து பரிசோதித்து அவதானமாக இருப்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயை முழுமையாக வெற்றி பெற முடியும்!!

டாக்டர்.ஷாமா குணதிலக்க
MBBS (கொழும்பு) MD (கொழும்பு) SLMC Reg No. 17334,
மருத்துவ ஆலோசகர் புற்றுநோயியல் நிபுணர்
மருத்துவ துறை தலைவர்
ஆசிரி AOI புற்றுநோய் மையம்

நாம் சிறுவர்களாக இருந்த போது “நிறைய சாப்பிட்டா தான், பெரிய ஆளாக வரலாம்!” என நம் வீட்டார் கூறுவதை கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ நாளடைவில் உணவுப்பழக்கவழக்கத்தில் சீர்மையை கடைபிடிக்க மறந்து விட்டோம். அளவுக்கு அதிகமான உணவுகளை சுவைக்காகவும் விருப்பத்திற்காகவும் உட்கொள்ள தொடங்குவதனால் உடல் எடையில் பாரியளவு மாற்றம் ஏற்படுகிறது. இதனை கவனத்திற்கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதினால் நீரிழிவு, இதய நோய்கள், கால்களில் வீக்கம், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் வரை ஏற்படுவதற்கான ஆபத்தான நிலை உருவாகிறது.

ஒருவரின் உடல் எடையானது அவருக்கான குறிப்பிட்ட BMI சுட்டியை தாண்டுகின்ற போது அதிக எடை என்ற பிரிவுக்குள் சேர்க்கப்படுகிறது.

அதிகப்படியான கார்போவைதரேட்டு, கொழுப்பு, உடற்பயிற்சி இல்லாமை, ஹோர்மோன் மாற்றங்கள் மற்றும் மரபணு போன்றன உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாக அமைகின்றன. இதில் உணவு பழக்கவழக்கத்தினால் ஏற்படும் எடை அதிகரிப்பு பற்றி தான் கவனம் செலுத்த போகிறோம். பொதுவாக இந்த எடை அதிகரிப்பானது கலோரி நுகர்வு மற்றும் செலவீனத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. நாம் செலவழிக்கும் கலோரியை விட அதிகமான கலோரியை உள்ளெடுக்கும் போது, நமது எடை அதிகரிக்கிறது. நாம் செலவழிக்கும் கலோரியை விட குறைவான கலோரியை உள்ளெடுக்கும் போது உடல் எடை குறையத் தொடங்குகிறது. 
இவ்வாறு அதிகமாக சேர்ந்துள்ள எடையை குறைக்க நீங்கள் மட்டுப்படுத்தப்பட்ட கலோரியை உட்கொண்டு, ஏற்கனவே உள்ள கலோரியை செலவழிக்க வேண்டும். இப்போது சிலர், நாளொன்றுக்கான கலோரி தேவையில்  அவர்களுக்கு பிடித்த இனிப்பு வகைகள் மற்றும் துரித உணவுகளை அடக்கி, கலோரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நினைக்கலாம். ஆனால் இது உடலுக்கு தீங்கினை விளைவிப்பதாக அமையுமே தவிர நீங்கள் எதிர்பார்க்கின்ற நல்ல மாற்றங்களை தராது. நாளொன்றுக்கு தேவையான கலோரியை அனைத்து சத்துக்களையும் உள்ளடக்குகின்ற உணவு தொகுதிகளை கொண்டு திட்டமிட வேண்டும். அதுவே உடல் எடை குறைப்புக்கும் நல்ல மாற்றத்திற்கும் வழிவகுக்கும். உங்களுக்கு உணவின் மீது வெறுப்பினை ஏற்படுத்தாத வகையில் எடை குறைக்க வாய்ப்பு கிடைத்தால், எவ்வளவு நன்றாகயிருக்கும்? உங்களுக்கு சலிக்காத வகையில் திட்டமிடப்பட்டுள்ள ஒரு வாரத்திற்க்கான உணவு கட்டுப்பாடு திட்டத்தினை இப்பகுதியில் இணைத்துள்ளோம்.

முதலாம் நாள்
நேரம் உணவுத் திட்டம்
6:30 AM வெள்ளரி டிடாக்ஸ் தண்ணீர் (1 க்ளாஸ்)
8:00 AM கொழுப்பு நீக்கிய பாலில் ஓட்ஸ் கஞ்சி (1 கோப்பை) மிக்ஸ்ட் நட்ஸ் (25 கிராம்)
12:00 PM ஸ்கிம்ட் பால் பனீர் (100 கிராம்)
2:00 PM மரக்கறி சலாது (1 கிண்ணம்)
2:10 PM பருப்பு (1 கிண்ணம்) கேரட் பட்டாணி காய்கறி (1 கிண்ணம்) 1 ரொட்டி/சப்பாத்தி
4:00 PM வெட்டிய பழங்கள் (1 கப்) மோர் (1 கண்ணாடி)
5:30 PM குறைந்த சர்க்கரை மற்றும் பால் கொண்ட தேநீர் (1 டீகப்)
8:50 PM மரக்கறி சலாது (1 கிண்ணம்)
9:00 PM பருப்பு (1 கோப்பை) சுரைக்காய் காய்கறி (1 கோப்பை)
1 ரொட்டி/சப்பாத்தி
இரண்டாம் நாள்
நேரம் உணவுத் திட்டம்
6:30 AM வெள்ளரி டிடாக்ஸ் தண்ணீர் (1 க்ளாஸ்)
8:00 AM தயிர் (1.5 கிண்ணம்) மரக்கறி கலந்த ரொட்டி (2 துண்டுகள்)
12:00 PM ஸ்கிம்ட் பால் பனீர் (100 கிராம்)
2:00 PM மரக்கறி சலாது (1 கிண்ணம்)
2:10 PM பருப்பு கறி (0.75 கிண்ணம்) மேத்தி சாதம் (0.5 கடோரி)
4:00 PM ஆப்பிள் (0.5 சிறியது (2-3/4″ டயா) பட்டர் மில்க் (1 க்ளாஸ்)
5:30 PM குறைந்த சர்க்கரை மற்றும் பால் கொண்ட தேநீர் (1 டீகப்)
8:50 PM மரக்கறி சலாது (1 கிண்ணம்)
9:00 PM பன்னீருடன் வதக்கிய காய்கறிகள் (1 கிண்ணம்) 1 ரொட்டி/சப்பாத்தி
பச்சை சட்னி (2 டேபிள்ஸ்பூன்)
மூன்றாம் நாள்
நேரம் உணவுத் திட்டம்
6:30 AM வெள்ளரி டிடாக்ஸ் தண்ணீர் (1 க்ளாஸ்)
8:00 AM ஸ்கிம் மில்க் யோகர்ட் (1 கப் (8 fl oz)) மல்டிகிரைன் 2 டோஸ்ட்
12:00 PM ஸ்கிம்ட் பால் பனீர் (100 கிராம்)
2:00 PM மரக்கறி சலாது (1 கிண்ணம்)
2:10 PM பன்னீருடன் வதக்கிய காய்கறிகள் (1 கிண்ணம்) 1 ரொட்டி/சப்பாத்தி
4:00 PM வாழைப்பழம் (0.5 சிறியது (6″ முதல் 6-7/8″ நீளம்) பட்டர் மில்க் (1 க்ளாஸ்)
5:30 PM குறைந்த சர்க்கரை மற்றும் பால் கொண்ட தேநீர் (1 டீகப்)
8:50 PM மரக்கறி சலாது (1 கிண்ணம்)
9:00 PM பருப்பு கறி (0.75 கிண்ணம்) மேத்தி சாதம் (0.5 கடோரி)
நான்காம் நாள்
நேரம் உணவுத் திட்டம்
6:30 AM வெள்ளரி டிடாக்ஸ் தண்ணீர் (1 க்ளாஸ்)
8:00 AM பழங்கள் மற்றும் நட்ஸ் யோகர்ட் ஸ்மூத்தி (0.75 க்ளாஸ்)
ஒரு முட்டை ஆம்லெட்
12:00 PM ஸ்கிம்ட் பால் பனீர் (100 கிராம்)
2:00 PM மரக்கறி சலாது (1 கிண்ணம்)
2:10 PM பருப்பு (1 கிண்ணம்)
1 ரொட்டி/சப்பாத்தி
4:00 PM ஆரஞ்சு (1 பழம் (2-5/8″ டயா)) பட்டர் மில்க் (1 க்ளாஸ்)
5:30 PM குறைந்த சர்க்கரை மற்றும் பால் கொண்ட தேநீர் (1 டீகப்)
8:50 PM மரக்கறி சலாது (1 கிண்ணம்)
9:00 PM 1 ரொட்டி/சப்பாத்தி
பச்சை சட்னி (2 டேபிள்ஸ்பூன்)
ஐந்தாம் நாள்
நேரம் உணவுத் திட்டம்
6:30 AM வெள்ளரி டிடாக்ஸ் தண்ணீர் (1 க்ளாஸ்)
8:00 AM பழங்கள் மற்றும் நட்ஸ் யோகர்ட் ஸ்மூத்தி (0.75 க்ளாஸ்)
12:00 PM ஸ்கிம்ட் பால் பனீர் (100 கிராம்)
2:00 PM மரக்கறி சலாது (1 கிண்ணம்)
2:10 PM குறைந்த கொழுப்புடைய பன்னீர் கறி (1.5 கிண்ணம்) 1 ரொட்டி
4:00 PM பப்பாளி (1 கப் 1″ துண்டுகள்) பட்டர் மில்க் (1 க்ளாஸ்)
5:30 PM குறைந்த சர்க்கரை மற்றும் பால் கொண்ட தேநீர் (1 டீகப்)
8:50 PM மரக்கறி சலாது (1 கிண்ணம்)
9:00 PM தயிர் (1.5 கிண்ணம்) உருளைக்கிழங்கு கறி (1 கிண்ணம்) 1 ரொட்டி/சப்பாத்தி
ஆறாம் நாள்
நேரம் உணவுத் திட்டம்
6:30 AM வெள்ளரி டிடாக்ஸ் தண்ணீர் (1 க்ளாஸ்)
8:00 AM சாம்பார் (1 கிண்ணம்)
2 இட்லி
12:00 PM ஸ்கிம்ட் பால் பனீர் (100 கிராம்)
2:00 PM மரக்கறி சலாது (1 கிண்ணம்)
2:10 PM தயிர் (1.5 கிண்ணம்) உருளைக்கிழங்கு கறி (1 கிண்ணம்)
ரொட்டி
4:00 PM பப்பாளி (1 கப் 1″ துண்டுகள்) பட்டர் மில்க் (1 க்ளாஸ்)
5:30 PM குறைந்த சர்க்கரை மற்றும் பால் கொண்ட தேநீர் (1 டீகப்)
8:50 PM மரக்கறி சலாது (1 கிண்ணம்)
9:00 PM பருப்பு (1 கிண்ணம்)
1 ரொட்டி/சப்பாத்தி
ஏழாம் நாள்
நேரம் உணவுத் திட்டம்
6:30 AM வெள்ளரி டிடாக்ஸ் தண்ணீர் (1 க்ளாஸ்)
8:00 AM சாம்பார் (1 கிண்ணம்)
02 தோசை
12:00 PM ஸ்கிம்ட் பால் பனீர் (100 கிராம்)
2:00 PM மரக்கறி சலாது (1 கிண்ணம்)
2:10 PM தயிர் (1.5 கிண்ணம்) உருளைக்கிழங்கு கறி (1 கிண்ணம்)
ரொட்டி
4:00 PM ஆப்பிள் (0.5 சிறியது (2-3/4″ டயா)) பட்டர் மில்க் (1 க்ளாஸ்)
5:30 PM குறைந்த சர்க்கரை மற்றும் பால் கொண்ட தேநீர் (1 டீகப்)
8:50 PM மரக்கறி சலாது (1 கிண்ணம்)
9:00 PM குறைந்த கொழுப்புள்ள பன்னீர் கறி (1 கிண்ணம்)
1 ரொட்டி/சப்பாத்தி

ஒரு உணவுத் திட்டமானது உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சரியான அளவில் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாட்டினை பின்பற்றுவதோடு நடை பயிற்சி மற்றும் உடலின் தேவைக்கு அமைய தண்ணீர் குடித்தல் ஆகியனவும் உடல் எடையை விரைவில் குறைக்க உதவும். ஒவ்வொருவரின் வயது, எடை மற்றும் அவர்களது வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப உணவு கட்டுப்பாடு திட்டமும் மாறுபடும். எப்போதும் ஒரு வைத்திய நிபுணரின் பரிந்துரையின் கீழ் உணவு கட்டுப்பாடை கடைப்பிடிப்பது ஆரோக்கியமான எடை குறைப்புக்கு மேலும் சிறந்த ஒரு வழிகாட்டியாக அமையும்.

Sources
https://www.healthifyme.com/blog/best-indian-diet-plan-weight-loss https://www.gqindia.com/content/how-to-lose-weight-fast-7-days https://www.pothunalam.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%87%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/weight-loss-diet-plan-in-tamil

நீரிழிவு நோய் – கேள்வியுறும் போதே மனதளவில் ஒரு விதமான சோர்வினையும் எதிர்மறையான எண்ணங்களையும் உருவாக்கும் தன்மைக் கொண்ட ஒரு சொல். இருப்பினும், நேர்மறையான முடிவுகளை  உரித்தாக்கிக் கொண்ட நீரிழிவு நோயாளிகள் மூவரின் கதைகளை நான் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன். அந்த அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை பல.

நான் குறிப்பிட விரும்பும் முதல் நோயாளி 28 வயதான ஓர் ஆண்,  அவருக்கு நீரிழிவு இருப்பதைக் கண்டறிந்தவுடன், அதிலிருந்து தான் முற்றிலும் குணமாக விரும்புவதாகக் கூறினார். பொதுவாகவே நீரிழிவு/சர்க்கரை நோய் இருந்தால், நோயாளி பல சிகிச்சைகளை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டியிருக்கும் என்பது பரவலாக நம்பப்படும் ஓர் கருத்து. ஆனால் இவர் முழுதாக நீரிழிவிலிருந்து வெளிபட விரும்பியதனால் அவரது வாழ்நாள் முழுவதும் நீரிழிவு நோய்க்கு மருந்து சாப்பிட அவசியமில்லாத ஒரு திட்டத்தினை உருவாக்க வேண்டிய தேவையிருந்தது. சர்க்கரை நோய்க்கு மருந்து அருந்தத் தேவையில்லாத நிலையை அடைவதையே “நீரிழிவு நிவாரணம்” என்கின்றோம். இவர் வருடக்கணக்கில் மருந்து குடிக்காமல் வாழ விரும்பியதால், அதற்கான திட்டத்தை வகுத்தோம். நீரிழிவு நோயிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் மற்றும் முறைகள் பல உள்ளன என்று பல ஆராய்ச்சிகள் கூறினாலும் அவை அனைவருக்கும் பொருந்தாது. ஆனால்,  சிலரால் அவற்றின் நிரந்தர நிவாரணம் பெற முடியும். குறிப்பாக நீரிழிவு  நோயின் ஆரம்ப கட்டத்தில் நோயினைக் கண்டறிந்திருப்பவர்கள் நீரிழிவு நோய் நிவாரணத் திட்டத்தினை நடைமுறைப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த நோயாளியின் எடை குறைப்பில் முதலில் கவனம் செலுத்தினோம். இரண்டாவது உடற்பயிற்சி மற்றும் உணவு நுகர்வு போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள். கடைசியாக இந்த மாற்றங்களின் பின்னர் குருதி சர்க்கரை அளவுகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை நாங்கள் கண்காணித்தோம்.  இதுதான் நாங்கள் கொண்டு வந்த திட்டம். அதற்கான வேலைகளைத் தொடங்கினோம். உதாரணமாக  உடல் எடையை குறைக்க அவரது உணவில் மாற்றம் தேவைப்பட்டது. அவருக்கு பிடித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்ற உணவுத் திட்டத்தை உருவாக்கினோம். ஒவ்வொருவருக்கும் உடற்பயிற்சி அவசியம், எனவே அவரது வாழ்க்கை முறையோடு சில பயிற்சிகளை இணைக்க முயற்சித்தோம்.  மேலும் நடைபயிற்சி போன்ற செயல்களின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை படிப்படியாகப் பின்பற்ற பரிந்துரைத்தோம். உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகள் பயன்படுத்த ஆரம்பித்தோம். 

குறிப்பாக EMPAGLIFLOZIN, ஒரு SGLT2 INHIBITOR மற்றும் VICTOZA INJECTION A GLP RECEPTOR BLOCKER ஆகிய இரண்டும் பயன்படுத்தப்பட்டன.

இவையனைத்தையும் அவர் தொடர்ந்தமையால் நீரிழிவு நோய் நீங்கி, நீரிழிவுச் சிக்கலின்றி நீரிழிவிற்கான மருந்து அருந்தாமல் வாழும் வாய்ப்பினை பெற்றார். உடல் எடையை குறைப்பவர்கள், குறிப்பாக நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டங்களில் அவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு குறைவது எங்களுக்கு தெரியும். HbA1c சோதனைகளில் அவருக்கு இயல்பான முடிவுகளைக் காட்டினாலும், அவர் இந்நிலையில் அடுத்த 15 அல்லது 20 ஆண்டுகள் நீரிழிவின்றி வாழ முடியும். அவருக்கு முன்பு நீரிழிவு நோய் இருந்தது, ஆனால் இப்போது இல்லை. அவர் புதிய வாழ்க்கை முறை மற்றும் மாற்றங்களை தொடர்ந்து கடைப்பிடித்ததனால் அவர் நீரிழிவு நோயிலிருந்து முற்றாக விடுபட முடிந்தது.

எனக்கு தெரிந்த இரண்டாவது கதை 10 வருட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 45 வயதுடைய நபரொருவருடையது. அவருக்கு நீரிழிவு நோயின் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. நோயின் அறிகுறி இல்லாத போது தங்கள் உடலுக்குள் என்ன நிகழும் என்ற அச்சம் மக்களுக்கு உண்டு.  நீரிழிவு நோயினை நம்மால் முழுதாக குணப்படுத்த முடியாதெனினும் அதனோடு இயல்பானதொரு வாழ்க்கையைத் தொடர சாதகமான தகவல்களை பரிந்துரைக்க விரும்புகின்றேன்.

பொதுவாக  45 வயது நிரம்பிய ஒருவர் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகக் கோளாறுகள், விழித்திரை பாதிப்பு அல்லது RETINOPATHY போன்ற கண் சிக்கல்கள், நரம்பியல் சிக்கல்கள் இல்லாது 85 ஆண்டு காலம் வரை வாழ்வதற்குத் தேவையானதை செய்ய முயற்சிக்கின்றோம். கால்களுக்கு இரத்த ஓட்டத்தில் உள்ள சிக்கல்கள் காயங்களை மீட்டெடுப்பதைப் பாதிக்கும் மற்றும் ஒரு கால் துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும். மேலும் நீரிழிவு நோயின்றி வாழ நான் அவருடன் பல விடயங்களை கலந்துரையாடினேன்.

புதிய வாகன பராமரிப்புத் தொழில்நுட்பத்தை அவதானிக்கச் சொன்னேன். வாகனத்தின் நீடித்த தொழில்நுட்பம் அதை இயக்கும் முன்பு வாகனத்தை பழுதுபார்ப்பதை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு சர்வீஸ் செய்யவில்லை எனில் ஒரு வாகனம் பயணத்தின் நடுவில் பழுதடைந்தால் அது கராஜ்ற்கு  கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இப்போது ​​வாகனம் முற்றிலும் பழுதடைவதைத் தடுக்கும் வகையில் சர்வீஸ் செய்து பராமரிக்கிறோம். அதுதான் சர்க்கரை நோய்க்கு நாம் பயன்படுத்தும் கோட்பாடும்.  

ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை வாகனத்தில் உள்ள  பழுதுகளைச் சரிபார்ப்பதைப் போலவே  இரத்த சர்க்கரை அளவு தொடர்பான அபாய நிலையை நாங்கள் சரிபார்த்து மதிப்பிடுகின்றோம். இந்த சோதனைகளின் போது ​​கண்கள், காலில் உள்ள நரம்புகள், சிறுநீரகங்கள், மாரடைப்பு வரக்கூடிய கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் பிற ஆபத்து காரணிகளை ஆய்வு செய்வதை உறுதி செய்கின்றோம். அவர் 85 ஆண்டு காலம் வரை மருந்துகளை உட்கொண்டு, அத்தகைய சிக்கல்களைத் தடுத்து வாழக் கூடிய வாழ்க்கை முறையைப் பற்றி அவருக்கு விளக்கினேன்.

அதுதான் இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் சாதகமான அம்சம்.  நீரிழிவு நோயினால் ஏற்படும் உறுப்பு சேதங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் தடுப்பதற்கும் எங்களிடம் புதிய முறைகள் உள்ளன. பலர் இந்த கருத்தை சர்வதேச அளவில் கூட பயன்படுத்துகின்றனர். இது பிரச்சனை எழும் வரை காத்திருக்காமல் அதை முற்றிலும் தடுக்கிறது. 

நான்  அரசியல் பற்றிப் பேசவில்லை, எனினும் உதாரணமாகவொன்றைச் சொல்ல விரும்புகின்றேன். இலங்கை அரசியலில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய சில விடயங்கள் உள்ளன!  நீங்கள் இலங்கையை அவதானித்தால் பிரச்சனைகள் எழும்போது அவற்றை நாங்கள் கையாளும் விதத்தினை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஆனால் அவற்றைத் தடுக்க நாங்கள் அரிதாகவே செயல்ப்படுகின்றோம்!  நீரிழிவு நோயில் நாம் செய்வது அதுவல்ல. 40 வருடங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இதை எப்படி முன்னெடுத்துச் செல்லலாம், எப்படி சரியாகச் செய்யலாம், வரும் ஆண்டுகளில் எந்தச் சிக்கலையும் சந்திக்காமல் இருக்க சிறந்த திட்டத்தை உருவாக்குவது எப்படி என்பது பற்றிய புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.

மூன்றாவது கதை சிறுநீரகத்தில் பிரச்சனையால் அவதிப்படும் ஒரு நோயாளியைப் பற்றியது. இது அவர்களின் நீரிழிவு, இரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் அளவை சரியாகக் கட்டுப்படுத்தாமல் வாழ்வதால் எழுகிறது. இந்த சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் மருத்துகளால் ஏற்படுவதாக மக்கள் தவறாக புரிந்து வைத்துள்ளனர். உண்மையில் அவை நீரிழிவு நோயினால் ஏற்பட்டதாக கூட இருக்கலாம். இதே நிலையில் உள்ள பலருக்கு, இதை குறித்து எதுவும் செய்ய முடியாது என்றும், அவர்கள் இறுதியில் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் நாங்கள் கூறியிருந்தோம். ஆனால் தற்போது, புதிய தொழில்நுட்பத்தின் அறிமுகத்தால் நாம் அவற்றை பரிந்துரைப்பதில்லை. மேலே விவாதிக்கப்பட்ட நீரிழிவு நோயின் நிவாரணம் போலவே எங்களிடம் நீரிழிவு சிறுநீரக நோய் நிவாரணமும் உள்ளது. 

இந்த நோயாளிக்கு எங்களிடம் ஒரு நிவாரணம் இருக்கிறது என்பதை ஆரம்பத்தில் நாங்கள் அறிந்துக்கொண்டமையால் அடிப்படை ஆபத்து காரணிகளைக் கண்டறிந்து குறைத்தோம். எங்களிடம் உள்ள புதிய மருந்துகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்ல; அவை சிறுநீரகத்திலும் நேர்மறையான விளைவினை ஏற்படுத்தக் கூடியவை.

சர்க்கரை நோய்க்கு நாம் பயன்படுத்தும் வழக்கமான மருந்து சிறுநீரகத்தை பாதிப்படையச் செய்யும் என்று பலர் கவலைப்படுவதுண்டு ஆனால் அம்மருந்தினால்  தான் சிறுநீரகத்தில் நேர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. 

உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்தைப் போலவே  சிறுநீரகத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தக் கூடிய மருந்துகள் நோயாளிக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. அவர்கள் 7 அல்லது 8 மருந்துகளை எடுக்க வேண்டியிருக்கும். அது அவர்களின் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவுகள் குறைவாக இருப்பதை உறுதி செய்யும். சிறுநீரகத்தில் குறைந்தளவிலான பக்க விளைவுகள் மாத்திரமே அவற்றால் ஏற்படும்.

பொதுவாக, பல ஆண்டுகளாக சிறுநீரகங்கள் பலவீனமடைவதாக அறியப்படுகிறது. ஆனால் புதிய ஆராய்ச்சியின் மூலம் இந்த புதிய வகை மருந்துகள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை நாங்கள் கவனிக்கக் கூடியதாக இருந்தது. நாங்கள் எமது நோயாளிகளுக்கு கூற விரும்புவது என்னவென்றால்  நீரிழிவு,சிறுநீரக நோயிலிருந்து விடுபட பல நடைமுறை விடயங்களை அவர்கள் மாற்றினாலே போதுமானது. அவர்களுக்கு வயதானாலும் அவர்களின் சிறுநீரகங்கள் இளமையாகவே இருக்கும்!
இந்த மூன்று கதைகள் மூலம் நான் சொல்ல விரும்புவது நீரிழிவு நோய் நீங்கள் பயப்பட வேண்டிய ஒன்றல்ல. நல்ல விடயம் என்னவென்றால் தற்போது நோய் கட்டுப்பாடு இல்லாதவர்கள் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும், நீரிழிவு நோயாளிகள் நீரிழிவு நோய் நிவாரணத் திட்டத்திற்குச் செல்வதற்கும், தங்கள் உறுப்புகள் சேதமடைந்தவர்களுக்கும் இயல்பான மற்றும் வசதியான வாழ்க்கையை வாழ ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கும் முடியும். நீண்ட ஆயுளுடன் வாழ விரும்பும் ஒருவருக்கு இந்தப் பயணத்திட்டம் பொருத்தமானதாக இருக்கும்.

Dr. நோயல் சோமசுந்தரம்
MBBS MD FRCP,
Consultant Endocrinologist

  • மனதினை ஒருநிலைப்படுத்தி உடலை ஓர் நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இணக்கமாக இருக்கச் செய்யும் பயிற்சியை  யோகாசனம் என்கிறோம். மனதை அமைதிபடுத்தி உடலை வலுப்படுத்தும் இக்கலையானது பல நூற்றாண்டு காலம் பழமையானது. எந்த தீங்கும் வந்த பின் காத்தலை விட, வரும் முன் காப்பதே சிறப்பானதாகும். நோயற்ற வாழ்வுக்கு சிறந்த உணவு பழக்கவழக்கங்களோடு உடற் பயிற்சியும் மன அமைதியும் அத்தியாவசியமாகும். ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்யும் தலைமுறையில் வாழும் நமது உடலானது, அசைவுகளின்றி பெரும்பாலான நேரத்தினை கழிப்பதனால், சீரான குருதியோட்டம் தடைப்பட்டு உடல் உறுப்புக்கள் நோய்வாய்ப்படும் அபாயத்திற்கு உள்ளாகின்றன. யோகாசன பயிற்சிகள் மூலம் குருதியோட்டத்தை சீராக பேணி நமது உடலை நோய்கள் தாக்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள முடியும். அத்தோடு யோகசனமானது என்றும் சுறுசுறுப்புடனும் இளமையுடனும்  நம் உடலை வைத்திருக்க உதவுகிறது. இதனை ஆறு வயதினை கடந்த எவர் வேண்டுமென்றாலும் செய்யலாம்.



யோகாசனம் செய்யும் போது பின்பற்ற வேண்டியவை
* யோகாசன பயிற்சியை மேற்கொள்ளும் போது வயிறு வெறுமையாக இருக்க வேண்டும். காலையில் உணவருந்துவதற்கு முன்னும் மாலையில் உணவருந்தி மூன்று மணி நேரம் கழிந்த பின்னும் யோகாசன பயிற்சியில் ஈடுபடலாம். பயிற்சி செய்ய முன் காலை கடன்களை கழித்து வயிற்றை வெறுமையாக வைத்திருத்தல் அவசியமாகும். பயிற்சிக்கு முன் சிறிதளவு வெந்நீர் அல்லது குளிரில்லாத பழரசம் அருந்தலாம். பயிற்சியின் பின் உடல் உஷ்ணமாக இருக்கும் சமயத்தில் உடனே நீர் அருந்துதல், உடலில் உஷ்ண மாறுபாட்டை உருவாக்கி நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடும் ஆகையால் பயிற்சியின் பின் 15நிமிடங்கள் கழித்து வெந்நீர் அருந்துதல் வேண்டும். பயிற்சியின் பின் சாப்பிடுதல், குளித்தல் போன்றவற்றை 30நிமிடங்கள் கழிந்த பின்னரே செய்தல் வேண்டும்.

  • பயிற்சியின் போது தளர்வான குறைந்த அளவிலான ஆடைகள் அணிதல் நன்று. இதனால் உடலை நன்றாக வளைத்து இடையூறின்றி பயிற்சியில் ஈடுபட முடியும்.
  • யோகாசன பயிற்சிக்கு தூய்மையான காற்றோட்டமுடைய அமைதியான இடத்தை தெரிவு செய்தல் முக்கியமாகும். சூழலில் கவனத்தை சிதறடிக்க கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் அல்லது வேறெந்த பொருட்களும் இல்லாதமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சியின் போது யோகா மேட் உபயோகித்தல் அவசியமாகும்.
  • தினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரையில் யோகாசன பயிற்சியில் ஈடுபட முடியும். யோகாசனம் செய்யும் போது உடலை இறுக்கமாக வைத்துக் கொண்டோ எடுத்தவுடன் கடினமான ஆசனங்களை முயற்சிப்பதையோ தவிர்க்க வேண்டும். மிகவும் நிதானமாக மெதுவாக பயிற்சியில் ஈடுபட வேண்டும். முதலில் உடலை முன் நோக்கி வளைக்கும் ஆசனத்தை செய்வீர்களாயின் அடுத்த ஆசனம் உடலை பின் நோக்கி வளைப்பதாக இருத்தல் அவசியம். யோகாசன பயிற்சியில் ஈடுபடுபவர்கள் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடுதலை தவிர்த்தல் உடலின் வளைந்துக் கொடுக்கும் தன்மையை பாதிக்காதிருக்கும்.
  • உடல் சுகயீனம், சத்திர சிகிச்சை, மாதவிடாய் காலங்களில் இருக்கும் பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் யோகாசன பயிற்சியில் ஈடுபட முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுதல் அவசியம்.
  • யோகாசன பயிற்சியின் முடிவில் சவாசனம் செய்து முடித்தல் முக்கியமானதாகும்.

    யோகாசன பயிற்சியின் நன்மைகள்

    * யோகாசனத்தில் உடல் வளைத்து பயிற்சிகளில் ஈடுபடுவதால் குருதி சுற்றோட்டம் சீராகுகிறது. இதனால் உடல் உறுப்புக்கள் ஆரோக்கியமாக பேணப்படுவதோடு உடலில் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பும், நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி இதயத்திலுள்ள திசுக்களின் ஆரோக்கியத்தையும் சீர் செய்கிறது.
  • யோகாசன பயிற்சியின் போது உடலின் முதன்மையான உறுப்புக்கள் நன்கு அழுத்தப்படுவதனால் ஞாபக மறதி நீங்கி நினைவாற்றல் அதிகரிக்கிறது.
  • அமைதியான சூழலில் நிதானமாக பொறுமையாக பயிற்சிகளில் ஈடுபடுவதால் மன அழுத்தத்திலிருந்து எளிதில் விடுபட்டு மன அமைதியும் கவனம் செலுத்தும் திறனும் அதிகரிக்கிறது. எந்த சூழ்நிலையிலும் நிதானமாக பதற்றமின்றி செயற்பட உதவுகிறது.
  • யோகாசன பயிற்சியின் மூலம் முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் நிலையினை அடைவதனால், உடலின் அனைத்து தசை மற்றும் நரம்புகள் விறைப்பு தன்மையற்ற நிலையை அடைந்து என்றும் உடலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
  • உடலில் காணப்படும் உஷ்ண அளவை சீராக பேணுவதற்கு யோகாசனம் பெரிதும் துணை புரிகிறது. கோடை காலங்களில் யோகாசன பயிற்சியில் ஈடுபடல், உடல் உஷ்னத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
  • சுவாச பிரச்சனை உள்ளவர்கள் யோகாசன பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்த  முடியும்.

பணம் சம்பாதிக்கும் பரபரப்பான ஓட்டத்தில் நம் உடலையும் மனதையும் பாதுக்காக்க தவறி விடுகிறோம். நம் வாழ்வின் பாதையின் நீள்சியையும் மகிழ்ச்சியையும் முடிவு செய்வது நோயற்ற உடல் உள நிலை மட்டுமே என்பதை நினைவிற் கொண்டு அதனை ஆரோக்கியமாக பேணி பாதுக்காக்க தினம் 20நிமிடங்களை யோகாசன பயிற்சியில் முதலீடு செய்வோம்.

Sources:
https://www.scientificjudgment.com/2019/03/yogasana-yoga-introduction-tamil.html https://www.maalaimalar.com/health/fitness/2020/04/01101539/1383629/yoga-meaning.vpf https://www.pothunalam.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%87%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/yoga-benefits-in-tamil