- மனதினை ஒருநிலைப்படுத்தி உடலை ஓர் நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இணக்கமாக இருக்கச் செய்யும் பயிற்சியை யோகாசனம் என்கிறோம். மனதை அமைதிபடுத்தி உடலை வலுப்படுத்தும் இக்கலையானது பல நூற்றாண்டு காலம் பழமையானது. எந்த தீங்கும் வந்த பின் காத்தலை விட, வரும் முன் காப்பதே சிறப்பானதாகும். நோயற்ற வாழ்வுக்கு சிறந்த உணவு பழக்கவழக்கங்களோடு உடற் பயிற்சியும் மன அமைதியும் அத்தியாவசியமாகும். ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்யும் தலைமுறையில் வாழும் நமது உடலானது, அசைவுகளின்றி பெரும்பாலான நேரத்தினை கழிப்பதனால், சீரான குருதியோட்டம் தடைப்பட்டு உடல் உறுப்புக்கள் நோய்வாய்ப்படும் அபாயத்திற்கு உள்ளாகின்றன. யோகாசன பயிற்சிகள் மூலம் குருதியோட்டத்தை சீராக பேணி நமது உடலை நோய்கள் தாக்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள முடியும். அத்தோடு யோகசனமானது என்றும் சுறுசுறுப்புடனும் இளமையுடனும் நம் உடலை வைத்திருக்க உதவுகிறது. இதனை ஆறு வயதினை கடந்த எவர் வேண்டுமென்றாலும் செய்யலாம்.
யோகாசனம் செய்யும் போது பின்பற்ற வேண்டியவை
* யோகாசன பயிற்சியை மேற்கொள்ளும் போது வயிறு வெறுமையாக இருக்க வேண்டும். காலையில் உணவருந்துவதற்கு முன்னும் மாலையில் உணவருந்தி மூன்று மணி நேரம் கழிந்த பின்னும் யோகாசன பயிற்சியில் ஈடுபடலாம். பயிற்சி செய்ய முன் காலை கடன்களை கழித்து வயிற்றை வெறுமையாக வைத்திருத்தல் அவசியமாகும். பயிற்சிக்கு முன் சிறிதளவு வெந்நீர் அல்லது குளிரில்லாத பழரசம் அருந்தலாம். பயிற்சியின் பின் உடல் உஷ்ணமாக இருக்கும் சமயத்தில் உடனே நீர் அருந்துதல், உடலில் உஷ்ண மாறுபாட்டை உருவாக்கி நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடும் ஆகையால் பயிற்சியின் பின் 15நிமிடங்கள் கழித்து வெந்நீர் அருந்துதல் வேண்டும். பயிற்சியின் பின் சாப்பிடுதல், குளித்தல் போன்றவற்றை 30நிமிடங்கள் கழிந்த பின்னரே செய்தல் வேண்டும்.
- பயிற்சியின் போது தளர்வான குறைந்த அளவிலான ஆடைகள் அணிதல் நன்று. இதனால் உடலை நன்றாக வளைத்து இடையூறின்றி பயிற்சியில் ஈடுபட முடியும்.
- யோகாசன பயிற்சிக்கு தூய்மையான காற்றோட்டமுடைய அமைதியான இடத்தை தெரிவு செய்தல் முக்கியமாகும். சூழலில் கவனத்தை சிதறடிக்க கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் அல்லது வேறெந்த பொருட்களும் இல்லாதமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சியின் போது யோகா மேட் உபயோகித்தல் அவசியமாகும்.
- தினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரையில் யோகாசன பயிற்சியில் ஈடுபட முடியும். யோகாசனம் செய்யும் போது உடலை இறுக்கமாக வைத்துக் கொண்டோ எடுத்தவுடன் கடினமான ஆசனங்களை முயற்சிப்பதையோ தவிர்க்க வேண்டும். மிகவும் நிதானமாக மெதுவாக பயிற்சியில் ஈடுபட வேண்டும். முதலில் உடலை முன் நோக்கி வளைக்கும் ஆசனத்தை செய்வீர்களாயின் அடுத்த ஆசனம் உடலை பின் நோக்கி வளைப்பதாக இருத்தல் அவசியம். யோகாசன பயிற்சியில் ஈடுபடுபவர்கள் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடுதலை தவிர்த்தல் உடலின் வளைந்துக் கொடுக்கும் தன்மையை பாதிக்காதிருக்கும்.
- உடல் சுகயீனம், சத்திர சிகிச்சை, மாதவிடாய் காலங்களில் இருக்கும் பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் யோகாசன பயிற்சியில் ஈடுபட முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுதல் அவசியம்.
- யோகாசன பயிற்சியின் முடிவில் சவாசனம் செய்து முடித்தல் முக்கியமானதாகும்.
யோகாசன பயிற்சியின் நன்மைகள்
* யோகாசனத்தில் உடல் வளைத்து பயிற்சிகளில் ஈடுபடுவதால் குருதி சுற்றோட்டம் சீராகுகிறது. இதனால் உடல் உறுப்புக்கள் ஆரோக்கியமாக பேணப்படுவதோடு உடலில் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பும், நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி இதயத்திலுள்ள திசுக்களின் ஆரோக்கியத்தையும் சீர் செய்கிறது.
- யோகாசன பயிற்சியின் போது உடலின் முதன்மையான உறுப்புக்கள் நன்கு அழுத்தப்படுவதனால் ஞாபக மறதி நீங்கி நினைவாற்றல் அதிகரிக்கிறது.
- அமைதியான சூழலில் நிதானமாக பொறுமையாக பயிற்சிகளில் ஈடுபடுவதால் மன அழுத்தத்திலிருந்து எளிதில் விடுபட்டு மன அமைதியும் கவனம் செலுத்தும் திறனும் அதிகரிக்கிறது. எந்த சூழ்நிலையிலும் நிதானமாக பதற்றமின்றி செயற்பட உதவுகிறது.
- யோகாசன பயிற்சியின் மூலம் முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் நிலையினை அடைவதனால், உடலின் அனைத்து தசை மற்றும் நரம்புகள் விறைப்பு தன்மையற்ற நிலையை அடைந்து என்றும் உடலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
- உடலில் காணப்படும் உஷ்ண அளவை சீராக பேணுவதற்கு யோகாசனம் பெரிதும் துணை புரிகிறது. கோடை காலங்களில் யோகாசன பயிற்சியில் ஈடுபடல், உடல் உஷ்னத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
- சுவாச பிரச்சனை உள்ளவர்கள் யோகாசன பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்த முடியும்.
பணம் சம்பாதிக்கும் பரபரப்பான ஓட்டத்தில் நம் உடலையும் மனதையும் பாதுக்காக்க தவறி விடுகிறோம். நம் வாழ்வின் பாதையின் நீள்சியையும் மகிழ்ச்சியையும் முடிவு செய்வது நோயற்ற உடல் உள நிலை மட்டுமே என்பதை நினைவிற் கொண்டு அதனை ஆரோக்கியமாக பேணி பாதுக்காக்க தினம் 20நிமிடங்களை யோகாசன பயிற்சியில் முதலீடு செய்வோம்.
Sources:https://www.scientificjudgment.com/2019/03/yogasana-yoga-introduction-tamil.html https://www.maalaimalar.com/health/fitness/2020/04/01101539/1383629/yoga-meaning.vpf https://www.pothunalam.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%87%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/yoga-benefits-in-tamil