இன்று கடந்த காலத்தை விட அதிகமாக புற்றுநோய் பற்றி கேள்விப்படுவது மட்டுமன்றி அதனால் மனிதர்களுள் ஏற்படும் பாதக விளைவுகளின் தாக்கமும் அதிகரித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. எதுஎவ்வாறிருப்பினும் கிடைக்கப் பெற்ற தரவுகளின் அடிப்படையில் நோக்குகையில் புற்றுநோயானது மனிதர்களுள் மட்டுமன்றி விலங்குகளிலுள்ளும் இனங்காணப்பட்டுள்ளது. புராதன புதைபடிவங்களில் காணப்படும் எலும்புக் கட்டிகள், எகிப்தில் மம்மி செய்யப்பட்ட மனித சடலங்களில் காணப்படும் புற்றுநோய் மற்றும் பண்டைய பதிவுகளில் எழுதப்பட்ட புற்றுநோய் பற்றிய பதிவுகள் ஆகியன புற்றுநோய் என்பது ஒரு புதிய நோய் அல்ல என்பதனை நமக்கு தெளிவுபடுத்துகிறது. 

2020 ஆம் ஆண்டில் மட்டும், உலகளவில் 19.3 மில்லியன் புதிய புற்றுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் அந்த ஆண்டில் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 10 மில்லியன் ஆகும். பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் உலகில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. முன்னர் நுரையீரல் புற்றுநோய் முதல் இடத்தில் இருந்தது, இப்போது அது புற்றுநோய் பரவலின் அடிப்படையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு, பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் வயிற்று புற்றுநோய் ஆகியவை இறங்கு வரிசையில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. நுரையீரல் புற்றுநோயானது உலகளவில் அதிக புற்றுநோய் இறப்புகளுக்கு காரணமாக உள்ளது. இது 2020 இல் 1.8 மில்லியன் உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது. இதனை அடுத்து புற்றுநோய் இறப்புகளை அதிகம் பதிவு செய்த புற்றுநோய்களாக பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய்கள் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது என்பது இன்று வரை பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய கேள்வி. சிலர் தமது பெற்றோரிடமிருந்து பெற்ற மரபணுக்களில் ஏற்படும் பிழையால் புற்றுநோய் ஏற்படுகிறது என்று எண்ணுகிறார்கள். அவர்கள் கூற முற்படுவது யாதெனில் புற்றுநோயை உண்டாக்கும் மரபணுக்களை பெற்றோரிடமிருந்து நேரடியாகப் பெற்றனர் என்பதாகும். இவ்வாறு ஏற்படும் புற்றுநோயின் விகிதம் 10% இற்கும் குறைவாகும். மக்கள் அப்படி நினைப்பதற்கு காரணம், புற்றுநோய் ஒரு மரபணு நோய் என்பதே ஆகும். சுமார் 90% புற்றுநோய்கள் கருத்தரித்த பின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பிறழ்வுகளால் தான் ஏற்படுகின்றன.

புற்றுநோயை உண்டாக்கும் மரபணு மாற்றங்களின் வளர்ச்சிக்கு பல காரணிகள் பங்களிக்கின்றன. பெரும்பாலான பிறழ்வுகள் தோராயமாக நிகழலாம். மகள் செல்களை உருவாக்க உடலின் பெற்றோர் செல்கள் பிரிக்கப்படும்போது, ​​டிஎன்ஏ பிரிக்கப்பட்டு மகள் செல்களுக்கு வழங்கப்படும், இம்முறையில் பிறழ்வுகள் ஏற்படலாம் ஆனால் செல்கள் இந்த பிறழ்வுகளை சரிசெய்ய மிகவும் சிக்கலான அமைப்பினை கொண்டுள்ளது. நீங்கள் வயதாகும்போது, ​​​​இந்த செயல்முறை பலவீனமடைகிறது. புற்றுநோய்க்கு வழிவகுக்கும் மரபணு மாற்றங்களின் மற்றொரு காரணம், உடலின் வெளிசூழலில் அல்லது உடலின் உட்சூழலில் உள்ள சில காரணிகளுக்கு மரபணுக்களின் வெளிப்பாடு ஆகும். அதனடிப்படையில் மொத்த புற்றுநோய் இறப்புகளில் 1/3 புகையிலை பயன்பாடு (சிகரெட், வெற்றிலை பயன்படுத்துதல் போன்றவை), உடற்பருமன், மது அருந்துதல், குறைவானளவு புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுதல் மற்றும் குறைவானளவு உடற்பயிற்சி ஆகியவற்றால் ஏற்படுகிறது. உலகின் ஏழ்மையான நாடுகளில் 30% புற்றுநோய்கள் புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் புரோட்டோசோவான் தொற்றுகளால் ஏற்படுகின்றன.

புற்றுநோய் வராமல் தடுக்க இரண்டு முக்கிய வழிமுறைகள் உள்ளன. ஒன்று, நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை கடைபிடித்தல். அதில் புகையிலை மற்றும் மது அருந்துதலை விடுத்தல், உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரித்தல், நாளாந்தம் உடற்பயிற்சி செய்தல், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுதல் போன்றவை அடங்கும். புற்று நோய் வரும்போது உடலில் ஏற்படும் ஆரம்ப மாற்றங்களைக் கண்டறிந்து அதற்குச் சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுப்பது மற்றுமொரு முறை.

கூடுதலாக, 1/3 புற்றுநோய்கள் பரவுவதற்கு முன்பே கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்கப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, கடைசி 1/3 புற்றுநோய்கள் குணப்படுத்த முடியாதவை. இதற்குக் காரணம் சில நேரங்களில் புற்றுநோயின் ஆபத்தான நிலையும், புற்றுநோயாளியின் வயது அல்லது பிற மருத்துவ நிலைமைகள் போன்ற காரணங்களால் சரியான சிகிச்சையினை அளிப்பது சிரமமாகிறது.

டாக்டர்.ஷாமா குணதிலக்க
MBBS (கொழும்பு) MD (கொழும்பு) SLMC Reg No. 17334,
மருத்துவ ஆலோசகர் புற்றுநோயியல் நிபுணர்
மருத்துவ துறை தலைவர்
ஆசிரி AOI புற்றுநோய் மையம்

Author

Write A Comment