இன்று ஆண் பெண் என இரு பாலினரும் அதிகமாக கவலைக் கொள்ளும் விடயமாக முகப்பருக்கள் மாறி வருகின்றன. இது இளைஞர்களிடையே எந்த அளவு தீவிரமான தாக்கத்தினை செலுத்துகிறதென்றால், முகப்பருக்களை போக்குவதற்கான தீர்வு என சந்தைகளில் எப்பொருளை விளம்பரப்படுத்தினாலும் உடனே தன்னிடமுள்ள கடைசி ரூபாய் வரை செலவழித்து அதை கொள்வனவு செய்ய தயாராக உள்ளனர். மருத்துவ நிபுணரின் பரிந்துரைகளின்றி விளம்பரங்களை நம்பி அழகு சாதன பொருட்களை கொள்வனவு செய்வதோடு இது நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி தெரிந்தவர்கள், இணையம் என பருக்களுக்கு தீர்வென குறிப்பிடும் அனைத்தையும் ஆராயாது முயற்சிக்க துணிந்து விட்டனர். தற்போது கருத்தடை மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின்றி பருக்களுக்காக உபயோகிக்கும் வழக்கம் பரவலாகி வருகிறது. உண்மையில், பருக்கள் வரக் காரணம் என்ன? அதற்கும் கருத்தடை மாத்திரைக்கும் என்ன தொடர்பு? முகப்பருக்களுக்கு கருத்தடை மாத்திரை தீர்வாக அமையுமா? போன்ற உங்களுடைய பல கேள்விகளுக்கான பதில்களை இப்பகுதியில் ஆராய்வோம்.
முகப்பருக்கள் வரக் காரணங்கள்
நம் சருமத்தின் இரண்டாவது அடுக்கில் Sebaceous glands என குறிப்பிடப்படும் எண்ணெய்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன. ஆன்ட்ரஜன் ஹார்மோனின் தூண்டுதல் காரணமாக இந்த சுரப்பிகள் சீபத்தினை சுரக்கின்றன. ஆன்ட்ரஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும் போது இந்த சீபமும் அதிகமாக சுரக்கப்படுகிறது. இதனால் சருமத்தில் எண்ணெய்ப்பசை தன்மை அதிகரித்து வெளிப்புறத்திலுள்ள மாசுக்கள் எளிதில் சருமத்தில் ஒட்டிக் கொள்ளும். இதன் விளைவாக எண்ணெய் சுரப்பிகளின் வாய்ப்பகுதி மூடிக் கொள்வதால் சீபம் வெளிவர முடியாமல் பருக்களாக வெளித்தள்ளப்படும். இது தவிர பரம்பரை, சினைப்பையில் நீர்க்கட்டி (Poly Cystic Ovary) இருத்தல், மன அழுத்தம் மற்றும் மாதவிடாய் கால ஹார்மோன் சமநிலையின்மையும் முகப்பருக்கள் தோன்ற காரணமாக அமைகின்றன.
முகப்பருவும் கருத்தடை மாத்திரையும்
முகப்பருக்கள் சருமத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலை ஏற்படுகையில் மகப்பேறு வைத்தியர் அல்லது தோல் வைத்திய நிபுணரை நாடுதல் ஒரு சிறந்த வழியாகும். அவர்கள் பருக்கான காரணங்களை பரிசோதனைகளின் மூலம் ஆராய்ந்து கண்டறிந்த பின், பருக்களுக்கு பிசிஓஎஸ், பிசிஓடி போன்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே, உடலில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையை சமன்படுத்த கருத்தடை மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர். இருப்பினும் கருத்தடை மாத்திரைகளை முதன்மையான தீர்வாக வைத்தியர்கள் பரிந்துரைப்பதில்லை.
முகப்பருக்களுக்கு கருத்தடை மாத்திரை தீர்வாகுமா
மேற்குறிப்பிட்டவாறு பரிசோதனைகளின் அடிப்படையில் ஒருவரது முகப்பருக்களுக்கு பிசிஓஎஸ், பிசிஓடி போன்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இருக்குமானால் வைத்தியரின் பரிந்துரைப்படி கருத்தடை மாத்திரை உள்ளெடுப்பதன் காரணமாக உடலில் ஹார்மோன் சமநிலை பெற்று தானாகவே பருக்கள் குறையத் தொடங்கும். மறைமுக காரணமாகயிருக்கும் பிசிஓஎஸ், பிசிஓடி ஹார்மோன் பிரச்சினைகளுக்காக கருத்தடை மாத்திரை பரிந்துரைக்கப்படுகின்றனவே தவிர முகப்பருக்கும் கருத்தடை மாத்திரைக்கும் எந்தவொரு நேரடி தொடர்பும் கிடையாது.
முகப்பருக்கள் வர பல காரணங்கள் இருப்பதனால் வைத்தியரின் பரிந்துரையின்றி கிறீம்கள் மற்றும் மாத்திரைகளை பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும். முறையான வைத்திய பரிசோதனைகளின்றி கிறீம்கள் மற்றும் மாத்திரைகளை உபயோகிப்பதனால் பருக்கள் வீரியமடையவும் மேலும் வேறு பல சரும பிரச்சனைகள் தோன்றவும் வாய்ப்புகள் அதிகம்.
முகப்பருக்களுக்கு தீர்வு என்ன?
முகப்பருக்களுக்கான தீர்வினை முடிவு செய்யும் முன் முறையான வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் அவசியமாகும். அதனடிப்படையில் வைத்தியர் அறிவுறுத்தும் மருந்துகள்/கிறீம்களுடன் உங்கள் அன்றாட வாழ்விலும் ஆரோக்கியமான உணவு பழக்கம் மற்றும் நாளாந்த உடற்பயிற்சியையும் இணைத்தல் வேண்டும். நாளாந்த உணவு வேளைகளில் அதிகமான கொழுப்பு உணவுகள் மற்றும் துரித உணவுகளை தவிர்த்து பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடல் எடைக்கு தேவையான அளவு தண்ணீரை குடிப்பதை உறுதி செய்யுங்கள். மன அழுத்தங்களில் இருந்து வெளிவரவும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருக்கவும் தியானப் பயிற்சியில் ஈடுபடுங்கள்.
எந்த உடல் மற்றும் மனநிலை பிரச்சனைக்கும் வைத்தியரின் பரிந்துரையின்றி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்த்து, அந்த பிரச்சனைக்கான வைத்திய நிபுணரை நாடி முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.