நீரிழிவு நோய் – கேள்வியுறும் போதே மனதளவில் ஒரு விதமான சோர்வினையும் எதிர்மறையான எண்ணங்களையும் உருவாக்கும் தன்மைக் கொண்ட ஒரு சொல். இருப்பினும், நேர்மறையான முடிவுகளை உரித்தாக்கிக் கொண்ட நீரிழிவு நோயாளிகள் மூவரின் கதைகளை நான் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன். அந்த அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை பல.
நான் குறிப்பிட விரும்பும் முதல் நோயாளி 28 வயதான ஓர் ஆண், அவருக்கு நீரிழிவு இருப்பதைக் கண்டறிந்தவுடன், அதிலிருந்து தான் முற்றிலும் குணமாக விரும்புவதாகக் கூறினார். பொதுவாகவே நீரிழிவு/சர்க்கரை நோய் இருந்தால், நோயாளி பல சிகிச்சைகளை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டியிருக்கும் என்பது பரவலாக நம்பப்படும் ஓர் கருத்து. ஆனால் இவர் முழுதாக நீரிழிவிலிருந்து வெளிபட விரும்பியதனால் அவரது வாழ்நாள் முழுவதும் நீரிழிவு நோய்க்கு மருந்து சாப்பிட அவசியமில்லாத ஒரு திட்டத்தினை உருவாக்க வேண்டிய தேவையிருந்தது. சர்க்கரை நோய்க்கு மருந்து அருந்தத் தேவையில்லாத நிலையை அடைவதையே “நீரிழிவு நிவாரணம்” என்கின்றோம். இவர் வருடக்கணக்கில் மருந்து குடிக்காமல் வாழ விரும்பியதால், அதற்கான திட்டத்தை வகுத்தோம். நீரிழிவு நோயிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் மற்றும் முறைகள் பல உள்ளன என்று பல ஆராய்ச்சிகள் கூறினாலும் அவை அனைவருக்கும் பொருந்தாது. ஆனால், சிலரால் அவற்றின் நிரந்தர நிவாரணம் பெற முடியும். குறிப்பாக நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டத்தில் நோயினைக் கண்டறிந்திருப்பவர்கள் நீரிழிவு நோய் நிவாரணத் திட்டத்தினை நடைமுறைப்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த நோயாளியின் எடை குறைப்பில் முதலில் கவனம் செலுத்தினோம். இரண்டாவது உடற்பயிற்சி மற்றும் உணவு நுகர்வு போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள். கடைசியாக இந்த மாற்றங்களின் பின்னர் குருதி சர்க்கரை அளவுகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை நாங்கள் கண்காணித்தோம். இதுதான் நாங்கள் கொண்டு வந்த திட்டம். அதற்கான வேலைகளைத் தொடங்கினோம். உதாரணமாக உடல் எடையை குறைக்க அவரது உணவில் மாற்றம் தேவைப்பட்டது. அவருக்கு பிடித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்ற உணவுத் திட்டத்தை உருவாக்கினோம். ஒவ்வொருவருக்கும் உடற்பயிற்சி அவசியம், எனவே அவரது வாழ்க்கை முறையோடு சில பயிற்சிகளை இணைக்க முயற்சித்தோம். மேலும் நடைபயிற்சி போன்ற செயல்களின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை படிப்படியாகப் பின்பற்ற பரிந்துரைத்தோம். உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகள் பயன்படுத்த ஆரம்பித்தோம்.
குறிப்பாக EMPAGLIFLOZIN, ஒரு SGLT2 INHIBITOR மற்றும் VICTOZA INJECTION A GLP RECEPTOR BLOCKER ஆகிய இரண்டும் பயன்படுத்தப்பட்டன.
இவையனைத்தையும் அவர் தொடர்ந்தமையால் நீரிழிவு நோய் நீங்கி, நீரிழிவுச் சிக்கலின்றி நீரிழிவிற்கான மருந்து அருந்தாமல் வாழும் வாய்ப்பினை பெற்றார். உடல் எடையை குறைப்பவர்கள், குறிப்பாக நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டங்களில் அவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு குறைவது எங்களுக்கு தெரியும். HbA1c சோதனைகளில் அவருக்கு இயல்பான முடிவுகளைக் காட்டினாலும், அவர் இந்நிலையில் அடுத்த 15 அல்லது 20 ஆண்டுகள் நீரிழிவின்றி வாழ முடியும். அவருக்கு முன்பு நீரிழிவு நோய் இருந்தது, ஆனால் இப்போது இல்லை. அவர் புதிய வாழ்க்கை முறை மற்றும் மாற்றங்களை தொடர்ந்து கடைப்பிடித்ததனால் அவர் நீரிழிவு நோயிலிருந்து முற்றாக விடுபட முடிந்தது.
எனக்கு தெரிந்த இரண்டாவது கதை 10 வருட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 45 வயதுடைய நபரொருவருடையது. அவருக்கு நீரிழிவு நோயின் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. நோயின் அறிகுறி இல்லாத போது தங்கள் உடலுக்குள் என்ன நிகழும் என்ற அச்சம் மக்களுக்கு உண்டு. நீரிழிவு நோயினை நம்மால் முழுதாக குணப்படுத்த முடியாதெனினும் அதனோடு இயல்பானதொரு வாழ்க்கையைத் தொடர சாதகமான தகவல்களை பரிந்துரைக்க விரும்புகின்றேன்.
பொதுவாக 45 வயது நிரம்பிய ஒருவர் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகக் கோளாறுகள், விழித்திரை பாதிப்பு அல்லது RETINOPATHY போன்ற கண் சிக்கல்கள், நரம்பியல் சிக்கல்கள் இல்லாது 85 ஆண்டு காலம் வரை வாழ்வதற்குத் தேவையானதை செய்ய முயற்சிக்கின்றோம். கால்களுக்கு இரத்த ஓட்டத்தில் உள்ள சிக்கல்கள் காயங்களை மீட்டெடுப்பதைப் பாதிக்கும் மற்றும் ஒரு கால் துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும். மேலும் நீரிழிவு நோயின்றி வாழ நான் அவருடன் பல விடயங்களை கலந்துரையாடினேன்.
புதிய வாகன பராமரிப்புத் தொழில்நுட்பத்தை அவதானிக்கச் சொன்னேன். வாகனத்தின் நீடித்த தொழில்நுட்பம் அதை இயக்கும் முன்பு வாகனத்தை பழுதுபார்ப்பதை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு சர்வீஸ் செய்யவில்லை எனில் ஒரு வாகனம் பயணத்தின் நடுவில் பழுதடைந்தால் அது கராஜ்ற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இப்போது வாகனம் முற்றிலும் பழுதடைவதைத் தடுக்கும் வகையில் சர்வீஸ் செய்து பராமரிக்கிறோம். அதுதான் சர்க்கரை நோய்க்கு நாம் பயன்படுத்தும் கோட்பாடும்.
ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை வாகனத்தில் உள்ள பழுதுகளைச் சரிபார்ப்பதைப் போலவே இரத்த சர்க்கரை அளவு தொடர்பான அபாய நிலையை நாங்கள் சரிபார்த்து மதிப்பிடுகின்றோம். இந்த சோதனைகளின் போது கண்கள், காலில் உள்ள நரம்புகள், சிறுநீரகங்கள், மாரடைப்பு வரக்கூடிய கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் பிற ஆபத்து காரணிகளை ஆய்வு செய்வதை உறுதி செய்கின்றோம். அவர் 85 ஆண்டு காலம் வரை மருந்துகளை உட்கொண்டு, அத்தகைய சிக்கல்களைத் தடுத்து வாழக் கூடிய வாழ்க்கை முறையைப் பற்றி அவருக்கு விளக்கினேன்.
அதுதான் இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் சாதகமான அம்சம். நீரிழிவு நோயினால் ஏற்படும் உறுப்பு சேதங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் தடுப்பதற்கும் எங்களிடம் புதிய முறைகள் உள்ளன. பலர் இந்த கருத்தை சர்வதேச அளவில் கூட பயன்படுத்துகின்றனர். இது பிரச்சனை எழும் வரை காத்திருக்காமல் அதை முற்றிலும் தடுக்கிறது.
நான் அரசியல் பற்றிப் பேசவில்லை, எனினும் உதாரணமாகவொன்றைச் சொல்ல விரும்புகின்றேன். இலங்கை அரசியலில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய சில விடயங்கள் உள்ளன! நீங்கள் இலங்கையை அவதானித்தால் பிரச்சனைகள் எழும்போது அவற்றை நாங்கள் கையாளும் விதத்தினை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஆனால் அவற்றைத் தடுக்க நாங்கள் அரிதாகவே செயல்ப்படுகின்றோம்! நீரிழிவு நோயில் நாம் செய்வது அதுவல்ல. 40 வருடங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இதை எப்படி முன்னெடுத்துச் செல்லலாம், எப்படி சரியாகச் செய்யலாம், வரும் ஆண்டுகளில் எந்தச் சிக்கலையும் சந்திக்காமல் இருக்க சிறந்த திட்டத்தை உருவாக்குவது எப்படி என்பது பற்றிய புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.
மூன்றாவது கதை சிறுநீரகத்தில் பிரச்சனையால் அவதிப்படும் ஒரு நோயாளியைப் பற்றியது. இது அவர்களின் நீரிழிவு, இரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் அளவை சரியாகக் கட்டுப்படுத்தாமல் வாழ்வதால் எழுகிறது. இந்த சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் மருத்துகளால் ஏற்படுவதாக மக்கள் தவறாக புரிந்து வைத்துள்ளனர். உண்மையில் அவை நீரிழிவு நோயினால் ஏற்பட்டதாக கூட இருக்கலாம். இதே நிலையில் உள்ள பலருக்கு, இதை குறித்து எதுவும் செய்ய முடியாது என்றும், அவர்கள் இறுதியில் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் நாங்கள் கூறியிருந்தோம். ஆனால் தற்போது, புதிய தொழில்நுட்பத்தின் அறிமுகத்தால் நாம் அவற்றை பரிந்துரைப்பதில்லை. மேலே விவாதிக்கப்பட்ட நீரிழிவு நோயின் நிவாரணம் போலவே எங்களிடம் நீரிழிவு சிறுநீரக நோய் நிவாரணமும் உள்ளது.
இந்த நோயாளிக்கு எங்களிடம் ஒரு நிவாரணம் இருக்கிறது என்பதை ஆரம்பத்தில் நாங்கள் அறிந்துக்கொண்டமையால் அடிப்படை ஆபத்து காரணிகளைக் கண்டறிந்து குறைத்தோம். எங்களிடம் உள்ள புதிய மருந்துகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்ல; அவை சிறுநீரகத்திலும் நேர்மறையான விளைவினை ஏற்படுத்தக் கூடியவை.
சர்க்கரை நோய்க்கு நாம் பயன்படுத்தும் வழக்கமான மருந்து சிறுநீரகத்தை பாதிப்படையச் செய்யும் என்று பலர் கவலைப்படுவதுண்டு ஆனால் அம்மருந்தினால் தான் சிறுநீரகத்தில் நேர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன.
உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்தைப் போலவே சிறுநீரகத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தக் கூடிய மருந்துகள் நோயாளிக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. அவர்கள் 7 அல்லது 8 மருந்துகளை எடுக்க வேண்டியிருக்கும். அது அவர்களின் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவுகள் குறைவாக இருப்பதை உறுதி செய்யும். சிறுநீரகத்தில் குறைந்தளவிலான பக்க விளைவுகள் மாத்திரமே அவற்றால் ஏற்படும்.
பொதுவாக, பல ஆண்டுகளாக சிறுநீரகங்கள் பலவீனமடைவதாக அறியப்படுகிறது. ஆனால் புதிய ஆராய்ச்சியின் மூலம் இந்த புதிய வகை மருந்துகள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை நாங்கள் கவனிக்கக் கூடியதாக இருந்தது. நாங்கள் எமது நோயாளிகளுக்கு கூற விரும்புவது என்னவென்றால் நீரிழிவு,சிறுநீரக நோயிலிருந்து விடுபட பல நடைமுறை விடயங்களை அவர்கள் மாற்றினாலே போதுமானது. அவர்களுக்கு வயதானாலும் அவர்களின் சிறுநீரகங்கள் இளமையாகவே இருக்கும்!
இந்த மூன்று கதைகள் மூலம் நான் சொல்ல விரும்புவது நீரிழிவு நோய் நீங்கள் பயப்பட வேண்டிய ஒன்றல்ல. நல்ல விடயம் என்னவென்றால் தற்போது நோய் கட்டுப்பாடு இல்லாதவர்கள் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும், நீரிழிவு நோயாளிகள் நீரிழிவு நோய் நிவாரணத் திட்டத்திற்குச் செல்வதற்கும், தங்கள் உறுப்புகள் சேதமடைந்தவர்களுக்கும் இயல்பான மற்றும் வசதியான வாழ்க்கையை வாழ ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கும் முடியும். நீண்ட ஆயுளுடன் வாழ விரும்பும் ஒருவருக்கு இந்தப் பயணத்திட்டம் பொருத்தமானதாக இருக்கும்.